போலீசிடம் தகராறு செய்த ஜோடி... காவல்துறையினரை பாராட்டிய நடிகர் சரத்குமார்!
தவறுகளை செய்துவிட்டு அரசியல் பிரபலங்களின் பெயரைக் கூறி தப்பித்துவிடலாம் என எண்ணும் மனநிலை இங்கு அறவே நீக்கப்பட வேண்டும் என நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் மயிலாப்பூர் போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். காவலர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது, லூப் சாலையில் காரில் அமர்ந்து பேசி கொண்டிருந்த தம்பதியிடம் அங்கிருந்து கலைந்து போகக்கூறினர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் காவலர்களை தகாத வார்த்தைகளால் பேசினர். இந்த காணொளி வைரலான நிலையில், போலீசை இழிவாக பேசிய சந்திரமோகன் மற்றும் அந்த பெண் ஆகிய 2 பேரையும் இன்று அதிகாலை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் காவல்துறையினரின் மாண்பு காக்கப்படவும் உடனடியான உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பாஜக நிர்வாகி சரத்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் நேற்று இரவு குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த நபர் தன்னிடம் கேள்வி கேட்ட காவலர்களிடம் அடாவடியாக பேசும் காணொளியைக் காண நேர்ந்தது. அந்த நபரும், அவரது மனைவியும், காவலர்களைத் தரக்குறைவாக ஒருமையில் பேசியதோடு, வீடியோ எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். ஆட்சியில் இருப்பவர்களது பெயரைக் கூறினால் காவலர்கள் பயந்துவிடுவார்கள் என்ற எண்ணத்தால் தவறு செய்துவிட்டு, ஆளும் கட்சியினரின் பெயரைக்கூறியதோடு, வேகமாக வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர். இந்த அடாவடிச் செயலில் ஈடுபட்டுவிட்டு விடுதி ஒன்றில் பதுங்கி இருந்த வேளச்சேரியைச் சேர்ந்த சந்திரமோகன் என்ற நபரையும் அவரது தோழியையும் காவல்துறை தேடிப்பிடித்து கைது செய்திருப்பது பாராட்டுதலுக்குரியது.
இரு வாரங்களுக்கு முன்பும் இதே போன்ற ஒரு சம்பவத்தில் ஒரு இளைஞர், திருமதி.கனிமொழியின் பெயரைக் கூறி காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, விசாரணைக்குப் பின் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். சமூகத்தில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் இருக்கவும் காவல்துறையினரின் மாண்பு காக்கப்படவும் இதுபோன்ற உடனடியான உறுதியான நடவடிக்கைகள் தேவை. காவல்துறையை பாராட்டும் அதே வேளையில் தவறுகளை செய்துவிட்டு அரசியல் பிரபலங்களின் பெயரைக் கூறி தப்பித்துவிடலாம் என எண்ணும் மனநிலை இங்கு அறவே நீக்கப்பட வேண்டும். வரும் காலங்களில், தவறு செய்பவர்கள் அரசியல்வாதிகள் மற்றும் கட்சிப் பிரமுகர்களின் பெயர்களை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று தமிழக அரசு வலியுறுத்துவதே சிறப்பாக இருக்கும் என்று ஆளும் அரசுக்கு உணர்த்த விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?