BJP SG Suryah on Senthil Balaji Jail : திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கடந்த 2007ஆம் ஆண்டு முதல், 2009ஆம் ஆண்டு வரை தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பதவி வகித்தார். கடந்த 2011ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில் முறைகேடு நடந்ததாகவும், மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் மத்திய தணிக்கை துறை சுட்டிக் காட்டியது. இதனையடுத்து, இந்த வழக்கில் 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி ஆ.ராசா கைது செய்யப்பட்டார். அவருடன் கனிமொழி, ஆர்.கே.சந்தோலியா, சித்தார்த் பெஹுரா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 2012ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பின்னர், இந்த ஊழல் வழக்கை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம், கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. 2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி மற்றும் 15 பேரை விடுதலை செய்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து கடந்த 2018-ம் ஆண்டில் சிபிஐ தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில், 2011ஆம் ஆண்டு முதல், 2015ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார்.
அப்போது, அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு, வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக கணேஷ் குமார் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் 47 பேர் மீது நான்கு வழக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், அமலாக்கத்துறையால் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
கடந்த ஓராண்டுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில்பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் சென்னை உயர்நீதிமன்றமும் தொடர்ச்சியாக தள்ளுபடி செய்திருந்தது.
பலமுறை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி வழக்கு (Senthil Balaji Case) தொடர்ந்திருந்தார். இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின், ஜார்ஜ் மாசிஹ் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், திமுக அமைச்சர்கள் ஆ.ராசா மற்றும் செந்தில் பாலாஜி இருவரையும் சுட்டிக்காட்டி, அதிக நாட்கள் சிறையில் இருந்ததில், ஆ.ராசாவை செந்தில் பாலாஜி வீழ்த்தி உள்ளதாக தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கூறியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எஸ்.ஜி.சூர்யா, ”ஆ.ராசாவை வீழ்த்திய செந்தில் பாலாஜி. 2G ஊழலில் 468 நாட்கள் சிறை சென்றார் அமைச்சர் அ.ராசா.
செந்தில் பாலாஜி அ.ராசாவை விட 3 நாட்கள் அதிகமாக; 471 நாட்கள் சிறை சென்று இன்று பிணையில் வருகிறார். ஊழல் சாதனையில் எப்போதும் போல் தி.மு.க-வினரிடையே கடும் போட்டி” என தெரிவித்துள்ளார்.