’திருமாவளவன்-மு.க.ஸ்டாலின் நாடகம்’.. ’விஜய் பொதுவானவர் அல்ல’.. எல்.முருகன் தாக்கு!
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை சிறையில் மொட்டை அடிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து எல்.முருகனிடம் கேட்டபோது, ‘இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கொண்டு சென்று அதற்கான நடவடிக்கை முறையாக எடுப்போம்’என்றார்.

சென்னை: மத்திய இணையமைச்சர் எல்.முருகன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ‘’இன்று பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இன்று தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மூன்றாவது முறை நரேந்திர மோடியை மக்கள் பிரதமரக தேர்ந்தெடுத்தது மிகப்பெரிய விஷயம். பாஜகவுக்கு மக்கள் ஆதரவு கொடுத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
சமூக நீதியின் தலைவரான பிரதமர் நரேந்திர மோடி பல விஷயங்களில் முன்னோடியாக இருக்கிறார். அனைவருக்குமான தலைவராக இருந்து வருகிறார். பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு பாஜகவில் ஒரு கோடி உறுப்பினர் என்ற இலக்குடன் பணி நடைபெற்று வருகிறது. அனைத்து மூத்த தலைவர்களும் ஒவ்வொரு பகுதியாக சுற்றுப்பயணம் சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர்’’ என்றார்.
அப்போது மது ஒழிப்பு மாநாடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசியது தொடர்பாக எல்.முருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், ‘’முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு சென்றிருந்தார். 17 நாட்கள் பயணம், பெரிய அளவில் முதலீடு வரும் என எதிர்பார்த்த நிலையில் முதலீடு வந்து சேரவில்லை. அதை மறைப்பதற்காக அமெரிக்காவில் இருந்து புறப்படும் 2 நாட்களுக்கு முன்பு இருந்து திருமாவளவன் மற்றும் ஸ்டாலின் இருவரும் சேர்ந்து ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மதுவிலக்கு வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது. ஆனால் அதை ஒரு அரசியல் நாடகமாக இருவரும் பயன்படுத்துகிறார்கள். முதல்வர் ஈர்த்த முதலீடுகள் குறித்து கேள்வி கேட்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு மதுவிலக்கு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். முதல்வர் 17 நாட்களாக அமெரிக்காவில் எத்தனை நிறுவனங்களை சந்தித்தார்? அவர் சந்தித்த பல நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் நிறுவனங்கள், அதற்கான ஒப்பந்தத்தை தமிழ்நாட்டிலேயே செய்திருக்கலாம். இதற்காக அமெரிக்கா செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த பயணம் ஒரு தோல்வி அடைந்த பயணம். அதை மறைப்பதற்கு தான் மதுவிலக்கு நாடகம்.
குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இதேபோல் தமிழ்நாட்டிலும் கொண்டு வர வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை குறைப்போம் என கூறினார்கள். அதற்கு பதிலாக எண்ணிக்கையை உயர்த்தி உள்ளார்கள். அப்போது திருமாவளவன் கூட்டணியில் இருந்தார். அதன் பிறகு நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணியில் இருந்தார். ஏன் திமுகவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மதுவிலக்கு மாநாட்டிற்கு ஏன் ஜெகத்ரட்சகனையோ. டி.ஆர்.பாலுவை அனுப்பவில்லை’’ என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை சிறையில் மொட்டை அடிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து எல்.முருகனிடம் கேட்டபோது, ‘இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கொண்டு சென்று அதற்கான நடவடிக்கை முறையாக எடுப்போம்’என்றார்.
மேலும் நடிகரும், தவெக தலைவருமான விஜய் குறித்து பேசிய எல்.முருகன், ’நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வார் என எதிர்பார்த்தோம். ஆனால் வாழ்த்து சொல்லவில்லை. அதற்கு பதிலாக மற்ற விழாக்களுக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டிருக்கிறார். இதிலிருந்து அவர் பொதுவான ஒரு நபராக இருக்கப்போவதில்லை என்று தெரிகிறது’’என்று கூறியுள்ளார்.
What's Your Reaction?






