’முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றுகிறார்’.. அன்புமணி ஆவேசம்.. என்ன விஷயம்?

''முதல்வர் ஸ்டாலின் வன்னிய சமுதாயத்திற்கு மிகப்பெரிய துரோகம் செய்து கொண்டிருக்கிறார். இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். வன்னியருக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க முதல்வருக்கு மனது கிடையாது'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

Sep 16, 2024 - 13:19
 0
’முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றுகிறார்’.. அன்புமணி ஆவேசம்.. என்ன விஷயம்?
MK Stalin And Anbumani Ramadoss

சென்னை: ராமசாமி படையாச்சியாரின் 107வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டி ஹால்டா சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி கூறுகையில், ’’வன்னிய சமுதாயம் கல்வி பெறவேண்டும், வேலைவாய்ப்பில் இடம்பெற வேண்டும், முன்னேற வேண்டும் என்ற நோக்கில் 50 ஆண்டுகளுக்கு மேலாக போராடியவ  ராமசாமி படையாச்சியார்  என்னென்ன நினைத்தாரோ அதற்கு நேர் எதிராக  திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ராமசாமி படையாச்சியார் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். அதை வரவேற்கிறோம். வன்னியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வேண்டும் என நீண்ட கால கோரிக்கையை மருத்துவர் ராமதாஸ் போராடி பெற்றதை நீதிமன்றம் ரத்து செய்தது.  

அதே வேளையில் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க எந்த தடையும் கிடையாது; தரவுகளை சேகரித்து நியாயப்படுத்தி தனியாக உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  ஆனால் தீர்ப்பளித்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் திமுக அரசு இதுவரை எதையும் செய்யவில்லை. 

மருத்துவர் ராமதாஸ் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அழுத்தம் கொடுத்த பிறகு, மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் நாங்கள் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு கொடுக்க முடியும் என முதல்வர் கூறுகிறார். முதல்வர் இந்த சமுதாயத்திற்கு மிகப்பெரிய துரோகம் செய்து கொண்டிருக்கிறார். இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

 முதல்வருக்கு வன்னியருக்கு உள் ஒதுக்கீடு  கொடுக்க மனது கிடையாது. அடையாள அரசியல் செய்து  மாலை அணிவித்து மணிமண்டபம் கட்டுவோம் என்று சொல்வதெல்லாம் போதாது. இன்று வன்னிய சமுதாயம் பாதாளத்தில் இருக்கிறது; மிக மோசமான நிலை இருக்கிறது.  சமூக நீதி பேசுகிற திமுக வன்னிய சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு கொடுங்கள்.  பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து முடித்து விட்டார்கள்  உயர்நீதிமன்றம் தடை செய்யவில்லை; உச்ச நீதிமன்றம் தடை செய்யவில்லை.  

கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஒரிசா, ஜார்கண்ட் என அனைத்து மாநிலங்களும் ஜாதிகாரி கணக்கெடுப்பு எடுத்து விட்டார்கள். தமிழ்நாட்டில் மட்டும் உரிமை இல்லை  என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஏமாற்று  வேலை. முதல்வர் தமிழ்நாட்டில் சமூக நீதியை நிலைக்காட்ட வேண்டும். 69  விழுக்காடு இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற வேண்டும் என்றால் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக எடுக்க வேண்டும்’’என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow