TVK Vijay: அப்பா, அம்மா முன்னிலையில் தவெக கொடி அறிமுகம்... விஜய்யின் அரசியல் அத்தியாயம் தொடங்கியது!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஏற்றினார். இதில் விஜய்யின் அப்பா, அம்மா, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
சென்னை: கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக வலம் வரும் விஜய், தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். ரஜினி, கமலுக்குப் பின்னர் கோலிவுட்டின் மாஸ் ஹீரோ என்ற இடத்தில் இருக்கும் விஜய், இனிமேல் அரசியல் தான் தனது இலக்கு என முடிவு செய்துவிட்டார். இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய அவர், இன்று அக்கட்சியின் கொடியையும், கழகத்தின் கொடிப் பாடலையும் அறிமுகம் செய்தார். சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி, அம்மா ஷோபா, கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தனது இல்லத்தில் இருந்து பனையூர் கட்சி அலுவலம் வருகை தந்த விஜய், முதலில் கட்சியின் உறுதிமொழியை மேடையேறி வாசித்தார். ”நமது நாட்டின் விடுதலைக்காகவும். நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்.” என குறிப்பிட்டார். விஜய் சொல்ல சொல்ல அதனை கழக நிர்வாகிகளும் உறுதி மொழியேற்றனர்.
இதனையடுத்து தவெக கொடியை அறிமுகம் செய்தார் தளபதி விஜய். இந்த கொடியின் மேலேயும் கீழேயும் சிவப்பு நிறமும், நடுவில் வாகை மலரை இரண்டு போர் யானைகள் வணங்குவது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், வகை மலைரை சுற்றிலும் 28 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில், 5 நட்சத்திரங்கள் நீல நிறத்திலும், 23 நட்சத்திரங்கள் பச்சை நிறத்திலும் உள்ளன. வாகை மலருக்கு என தனிச் சிறப்புகள் உள்ளன, வாகை மரம் வலுவான மரமாகும், தமிழீழத்தின் தேசிய மரமாகும்.
சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வெற்றிக் களிப்பை பகிர்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன.
"வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சி; உட்காது
எதிர்ஊன்றல் காஞ்சி; எயில்காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை-அதிரப்
பொருவது தும்பையாம்; போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்"
இதனை குறிக்கும் விதமாகவே தவெக கொடியில் வாகை மலர் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், நட்சத்திரங்களின் எண்ணிக்கையிலும் சில குறியீடுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தவெக கொடியை தலைவர் விஜய் அறிமுகப்படுத்தியதை அக்கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
What's Your Reaction?