தொண்டர்களுக்கு விஜய் அறிவுரை... தேர்தலுக்கு முழு வீச்சில் ஆயத்தமாகும் தவெக... கலக்கத்தில் எதிர்கட்சிகள்!
வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல், இடம் மாற்றுதல் மற்றும் ஆதார் எண்ணை இணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம்களை நடத்துவது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தவெக தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு அறிவுருத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகரான விஜய், தனது சினிமா வாழ்க்கையில் இருந்து விடுபட்டு முழு நேர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். அதன்படி கட்சியின் பெயர், கட்சியின் கொடி, கட்சியின் கொள்கை பாடல் என ஒவ்வொன்றாக அறிமுகம் செய்து அரசியல் களத்தில் பூகம்பத்தை ஏற்படுத்தினார். இதனையடுத்து அண்மையில் விக்கிரவாண்டி, வி சாலையில் நடைபெற்ற தவெக-வின் முதல் மாநாடு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று எதிர்கட்சிகளை கலக்கத்தில் ஆழ்த்தியது. இந்த மாநாட்டில் பேசிய விஜய், கூட்டணி பற்றியும் வெளிப்படையாக அறிவித்தார். அதன்படி, அரசியல் பயணத்தில் நம்மை நம்பி வருபவர்களையும் நாம் அன்போடு வரவேற்க வேண்டும். அப்படி வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் சமமான அதிகாரப் பங்கு கொடுக்கப்படும் என்றார். விஜய்யின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் கடுமையான போட்டிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வரும் விஜய், தனது கட்சியை பலப்படுத்தி வருகிறார். அதன்படி தொகுதிவாரியாக கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2026ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல், இடம் மாற்றுதல் மற்றும் ஆதார் எண்ணை இணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம்களை நடத்துவது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தவெக தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு அறிவுருத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், “கழகத் தோழர்களுக்கு வணக்கம். இந்தியத் தேர்தல் ஆணையம், 01.01.2025 என்பதைத் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கமுறை திருத்தத்தினை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல், இடம் மாற்றுதல் மற்றும் ஆதார் எண்ணை இணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம்களை நடத்துகிறது. இம்மாதத்தில் 16.11.2024, 17.11.2024 மற்றும் 23.11.2024, 24.11.2024 ஆகிய தேதிகளில், நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் இந்தச் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. புதிதாகப் பெயர் சேர்க்க, சில ஆவணங்களைச் சான்றாக இணைக்க வேண்டும். மேலும் அங்கு வழங்கப்படும் விண்ணப்பப் படிவங்களை உடனுக்குடன் நிரப்பி, முகாம்களில் உள்ள அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் படி நம் கழகம் சார்பாக, தங்கள் மாவட்டத் தொகுதிகளில் உள்ள மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வார்டு மற்றும் வட்டம் என அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மேற்குறிப்பிட்ட இரண்டு வாரங்களிலும் (நான்கு முகாம் நாட்களில்) மாவட்டத் தலைவர்கள், அணித் தலைவர்கள் மேற்பார்வையில், ஒவ்வொரு தொகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ள ஏழு (7) தற்காலிகப் பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளை ஈடுபடுத்திக்கொண்டு இம்முகாம் தொடர்பாக ஆட்டோ பிரச்சாரம் செய்வதுடன் பொதுமக்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்து இப்பணியில் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்” என தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?