மருத்துவத் துறையில் காலிப்பணியிடங்கள் என்று மாயத் தோற்றம் - அமைச்சர் மா.சு குற்றச்சாட்டு
மருத்துவத் துறையில் காலிப்பணியிடங்கள் என செய்தி வெளியிட்டு மாயத் தோற்றத்தை உருவாக்குவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் கடந்த சட்டமன்ற நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மருத்துவ துறை சார்ந்த திட்டங்கள், அதில் செயல்படுத்தப்பட்ட மற்றும் எஞ்சியுள்ள திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில், அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டு அடுத்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் நிரந்தர மற்றும் தற்காலிக பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.
வருகின்ற 14 ,15 தேதி கொரோனா காலத்தில் பணியாற்றிய 1271 ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க ஆணைகள் வழங்கப்பட உள்ளது. கொரோனா காலத்தில் பணியாற்றிய எஞ்சிய 954 செவிலியர்கள் ஒப்பந்த செவிலியர்களாக பணியாற்ற ஆணை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட்ட பிறகு எஞ்சி உள்ள 300 செவிலியர்களுக்கான பணியிடங்களை மருத்துவத் தேர்வு வாரியம் மூலம் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதன் மூலம் 100% செவிலியர்கள் காலி பணியிடங்களில் இல்லாத நிலை உருவாக்கப்படும் என தெரிவித்தார்.
நூறு சதவீதம் கொரோனா காலத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வேலை வழங்கப்படும். அதேபோன்று 2553 மருத்துவ பணியிடங்களுக்கு 25 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என்றும், வருகின்ற ஜனவரி 27-ம் தேதி ஆன்லைன் தேர்வு நடைபெறும் என்றும் கூறினார்.
இத்தகைய சூழ்நிலையில் பெரிய அளவில் மருத்துவத்துறையில் காலி பணியிடங்கள் இருப்பதாக ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி வருவதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.
மேலும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர் காலிப் பணியிடங்களை நிரப்பும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அவற்றை மாநகராட்சி தான் நிறைவேற்ற வேண்டும் அவற்றை நிரப்ப சுகாதாரத்துறை சார்பில் நகராட்சி நிர்வாகத்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்று கூறினார்.
மருத்துவத்துறையை பொறுத்தவரை ஒரு காலிப்பணியிடம் கூட இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என தொடர்ந்து பணிகள் மேற்கொண்டு வருகிறோம். எங்கும் மருத்துவ சேவைகள் பாதிக்கப்படவில்லை, நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், மருத்துவர்கள் இல்லாத இடங்களில், உடனடியாக மருத்துவர்கள் நிரப்பப்பட்டு வருகின்றனர். 2500 பணியிடங்களுக்கு 25000 பேர் விண்ணப்பம் செய்கின்றனர். ஆனால் அரசு மருத்துவர்கள் வேலையை விட்டு செல்கின்றனர் என்று செய்தி வெளியிடப்படுவதாக கூறினார். இந்நிலையில், அமைச்சர் மா.சுப்ரமணியம் செய்தியாளர்களின் அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் புறப்பட்டு சென்றார்.
What's Your Reaction?