1999-ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ‘வாலி’ திரைப்படத்தின் மூலம் எஸ்.ஜே.சூர்யா இயக்குநராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தில் அவர் கேமியோ ரோலில் நடித்திருப்பார். இதையடுத்து விஜய் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான ‘குஷி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இப்படி இயக்குநராக வலம் வந்த எஸ்.ஜே. சூர்யா பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ’மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. அதுமட்டுமல்லாமல், ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் வசூலையும் வாரிக்குவித்தது. சமீபத்தில், தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்போது ஷங்கர்-ராம் சரண் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’, ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 3’, விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’, கார்த்தி - பி.எஸ்.மித்ரனின் ‘சர்தார் 2’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதையடுத்து கில்லர் என்ற தலைப்பில் அவர் மீண்டும் ஒரு படம் இயக்கவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
இந்த நிலையில் எஸ்.ஜே. சூர்யா, கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 15-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், மக்களவை சபாநாயகர் ஓம். பிர்லா கலந்து கொண்டு எஸ்.ஜே.சூர்யாவிற்கு பட்டத்தை வழங்கினார். இதையடுத்து அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக சிம்பு, ராம் சரண் ஆகியோருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.