ஜார்கண்ட் முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்.. இண்டியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு
ராஞ்சியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றுக்கொண்டார்.
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
ஜார்க்கண்ட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இண்டியா கூட்டணி மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 56 இடங்களைக் கைப்பற்றியது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 4 இடங்களிலும், சிபிஐ-எம்எல் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 24 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இண்டியா கூட்டணியின் வெற்றியை அடுத்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஹேமந்த் சோரன், கடந்த 24ம் தேதி ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ராஞ்சியில் உள்ள மொராபாதி மைதானத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் ஜார்க்கண்ட்டின் 14வது முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.
இந்த பதவியேற்பு விழாவில், இந்தியா கூட்டணி தலைவர்களான காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, சிபிஐ பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார், பீகாரின் லோபி தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
What's Your Reaction?