விவசாயிகளுக்கு குட் நியூஸ்.. பிஎம். கிஸான் திட்டத்தில் 2000 ரூபாய் உதவித் தொகை..!
பிரதமர் மோடி 19 ஆவது முறையாக 10 கோடி விவசாயிகளுக்கு 2000 ரூபாய் உதவித் தொகையை வழங்குகிறார். 2019ல் தொடங்கிய கிசான் சம்மான் நிதி திட்டத்தில் இதுவரை 3.46 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் மோடி, பீகார் மாநிலம் பாகல்பூரில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 19வது தவணையாக சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடியை விடுவிக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4 மாதங்களுக்கு ஒரு முறை இரண்டாயிரம் ரூபாய் வீதம் 3 தவணைகளாக இந்த தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதுவரை 18 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 19 ஆவது தவணையாக இரண்டாயிரம் ரூபாய் உதவித் தொகையை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார்.
பிரதமரின் கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன்படி, நாடு முழுவதும் உள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஆறாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. 18வது தவணைத் தொகை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு சுமார் 4 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், 19வது தவணை விடுவிக்கப்படுகிறது.
பிஎம். கிஸான் திட்டம் என்பது இந்தியாவின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், குறைந்த நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கவும் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம்தான், பிஎம் கிசான் எனப்படும் "பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா" திட்டம் ஆகும்.
இதுகுறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளதாவது, "பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டம் தொடங்கி 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த திட்டம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நிதிநிலையை தொடர்ந்து பலப்படுத்தும் விதமாக அமையும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இந்த திட்டம் தொடங்கியது முதல் இதுவரை ரூ.3.46 லட்சம் கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
பிரதமர் கிசான் யோஜனாவிற்கு E-KYC செய்வது கட்டாயமாகிவிட்டது.. இந்த உதவித்தொகையை வழக்கமாக பெறும் விவசாயிகள் தங்களது வங்கிக் கணக்கில் E-KYC -யை செய்து முடித்திருக்க வேண்டும் என்றும், செல்போனில் PM கிசான் யோஜனா செயலியின் உதவியுடன் E-KYC மேற்கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பிஎம் கிசான் திட்டத்தின் பயனைப் பெறும் விவசாயிகள் e-KYC-ஐ நிறைவு செய்வது மிக அவசியமாகும். e-KYC செய்து முடிக்காத விவசாயிகள் 19வது தவனைத் தொகையை பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
What's Your Reaction?






