ஸ்ரீநகர்: காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு அண்மையில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற இந்தத் தேர்தல் வாக்குகள், கடந்த 8ம் தேதி எண்ணப்பட்டன. இதில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணி மொத்தம் 55 இடங்களை வென்று ஆட்சியமைக்கும் உரிமைப் பெற்றது. காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றாலும், சுயேச்சை எம்எல்ஏ.க்கள் 4 பேர், ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ஒருவர் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவளித்துள்ளனர்.
இதனையடுத்து தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா, துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதனை ஆளுநர் மனோஜ் சின்ஹா அனுமதி வழங்கியதை அடுத்து தற்போது ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்றார். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா, ஜேகேஎன்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங், சிபிஐ தலைவர் டி ராஜா, திமுக சார்பில் எம்பி கனிமொழி உள்ளிட்ட இந்திய அணி தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
காலை 11:30 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், துணை நிலை ஆளுநர் உமர் அப்துல்லாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தேசிய மாநாடு கட்சியின் உமர் அப்துல்லா 2வது முறையாக அம்மாநில முதல்வராக பதவி ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு, உமர் அப்துல்லாவின் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார்.
ஆனால், வடகிழக்குப் பருவமழையின் காரணமாக ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு, அதற்கான முன்னெச்சரிக்கைப் பணிகளில் ஈடுபட்டுள்ளதால், அவ்விழாவில் நேரில் கலந்துகொள்ள இயலாது என்று அவரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, திமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பங்கேற்றார். மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லாவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் கனிமொழி. அதேபோல், இந்தியா கூட்டணி தலைவர்கள் உட்பட பலரும் உமர் அப்துல்லாவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
Met with Dr. Farooq Abdullah, the president of the JKNC party, and conveyed my best wishes to the newly forming government and the chief minister designate, @OmarAbdullah, at Srinagar along with INDIA bloc leaders @yadavakhilesh, @supriya_sule, Prakash Karat, @ComradeDRaja. pic.twitter.com/h1ZFX5VUU6
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 16, 2024