Anna Canteens Reopen : மீண்டும் வந்தாச்சு 'அண்ணா கேண்டீன்'.. 5 ரூபாய்க்கு உணவு.. அசத்தும் முதல்வர்!
Anna Canteens Reopen in Andhra Pradesh : முதற்கட்டமாக 100 இடங்களில் அண்ணா கேண்டீன்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாத இறுதிக்குள் மாநிலம் முழுவதும் 203 இடங்களில் அண்ணா கேண்டீன்கள் தொடங்கப்படும் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. இந்த கேண்டீன்களில் காலை, மதியம் மற்றும் இரவு என 3 வேளையும் 5 ரூபாய்க்கு உணவு வழங்கப்படும்.
Anna Canteens Reopen in Andhra Pradesh : தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனது ஆட்சிக்காலத்தில் கடந்த 2013ம் ஆண்டு மலிவு விலையில் உணவு வழங்கும் அம்மா உணவத்தை (Amma Unavagam) தொடங்கினார். மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தில் 1 ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், கருவேப்பிலை சாதம், 3 ரூபாய்க்கு தயிர் சாதம் வழங்கப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த புரட்சிகரமான இந்த திட்டத்தின் மூலம் தலைநகர் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் ஏழை, எளிய மக்கள் மிகவும் குறைந்த விலையில் பசியாறி வருகின்றனர். மேலும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பல்வேறு நிறுவனங்களில் குறைந்த ஊதியத்தில் பணி புரிபவர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் வயிற்றை 'அம்மா உணவகம்' இன்றும் நிரப்பி வருகிறது.
இந்த திட்டத்தை பார்த்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த 2016ம் ஆண்டு ஆந்திரா முழுவதும் 5 ரூபாய்க்கு உணவு வழங்கும் அண்ணா கேண்டீன் (Anna Canteens) எனப்படும் அண்ணா உணவகங்களை திறந்தார். பின்பு 2019ம் ஆண்டு ஆந்திராவில் ஓய்எஸ்ஆர் காங்கிரசின் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததும் அண்ணா கேண்டீன்கள் முடக்கப்பட்டன.
ஆந்திராவில் ஆட்சிக்கு வந்தால், அண்ணா கேண்டீன்கள்(Anna Canteens in Andhra Pradesh) மீண்டும் திறக்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு இந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதி கொடுத்து இருந்தார். கடந்த மே மாதம் நடந்த ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.
இந்நிலையில், தான் வாக்குறுதி அளித்தபடி ஆந்திராவில் அண்ணா கேண்டீன்களை(Anna Canteens Reopen) இன்று மீண்டும் திறந்து வைத்துள்ளார் முதல்வர் சந்திரபாபு நாயுடு. முதற்கட்டமாக 100 இடங்களில் அண்ணா கேண்டீன்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாத இறுதிக்குள் மாநிலம் முழுவதும் 203 இடங்களில் அண்ணா கேண்டீன்கள் தொடங்கப்படும் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. இந்த கேண்டீன்களில் காலை, மதியம் மற்றும் இரவு என 3 வேளையும் 5 ரூபாய்க்கு உணவு வழங்கப்படும்.
ஆந்திராவில் முக்கியமான மக்கள் கூடும் பகுதிகள், அதிக தொழிலாளர்கள் வேலை பார்க்கும் பகுதிகளில் அண்ணா கேண்டீன்கள் அமைக்கப்படுகின்றன. இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, ''ஏழை, எளிய மக்களின் வயிற்றை நிரப்புவதை விட வேறு என்ன திருப்தி கிடைத்து விட போகிறது. ஆந்திராவில் எந்த ஒரு நபரும் பட்டினியால் வாடக்கூடாது என்பதே எனது இலக்கு. ஒவ்வொரு அண்ணா கேண்டீனும் 350 மக்களின் பேசியை போக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேண்டீன்களை பராமரிக்க ஆண்டுதோறும் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்'' என்று கூறியுள்ளார்.
What's Your Reaction?