Adani Group Denied Hindenburg Allegation : பெரு நிறுவனங்களில் நடக்கும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வரும் நிறுவனம் ஹிண்டன்பர்க். அமெரிக்காவை சேர்ந்த இந்நிறுவனம் கடந்த ஆண்டு தொடக்கத்தில், அதானி குழும நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தது.
அதாவது அதானி குழும நிறுவனங்கள் பங்குச்சந்தைகளில் முறைகேடு செய்து பங்குகளின் மதிப்பை உயர்த்தி காட்டி அதிக கடன்கள் பெற்று வருகிறது. போலி நிறுவனங்களை தொடங்கி வரி ஏய்ப்பிலும் ஈடுபட்டு வருகிறது என்று ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறி இருந்தது. ஹிண்டன்பர்க்கின் அறிக்கையால் அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்து பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.
அதே வேளையில் ஹிண்டன்பர்க்கின் அறிக்கையை முற்றிலும் தவறானது என்று அதானி குழும நிறுவனங்கள் விளக்கம் அளித்து இருந்தன. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்ற நிலையில், பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான 'செபி' இந்த வழக்கை விசாரித்து முடிவெடுக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு 'செபி' நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்நிலையில், அதானி குழும நிறுவனங்களில் செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவருக்கும் பங்குகள் இருப்பதாக நேற்று இரவு ஹிண்டன்பர்க் அறிக்கை ஒன்று வெளியிட்டது.
அந்த அறிக்கையில், ''அதானி குழுமம் மோசடியில் ஈடுபடதற்கான ஆதாரம் இருந்தபோதிலும், இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான 'செபி' அதானி குழும நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் 'செபி'யின் தலைவர் மாதபி புரிக்கும், அதானி குழுமத்துக்கும் தொடர்பு உள்ளது என முன்பே சந்தேகித்தோம்.
மொரிஷியஸ் மற்றும் பெர்முடா நாடுகளில் அதானியின் சகோதரர் வினோத் அதானி மோசடி செய்த போலி நிறுவனத்தில் 'செபி'யின் தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச்சும் பங்குகளை வைத்திருந்தது தற்போது தெரியவந்துள்ளது. இருவரும் மேற்கண்ட நிறுவனத்தில் கடந்த 2015ம் ஆண்டு பங்குகள் பெறக்கூடிய IPE Plus Fund என்ற கணக்கை தொடங்கியுள்ளனர். மாதபி புரி புச்சும், தவால் புச்சும் தாங்கள் பெற்ற சம்பளத்தை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்'' என்று கூறப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த 'செபி'யின் தலைவர் மாதபி புரி புச், ''ஹிண்டன்பர்க் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. இதில் எந்த உண்மையும் இல்லை. குற்றச்சாட்டு அனைத்தையும் மறுக்கிறோம். எங்களின் நிதிசார்ந்த நடவடிக்கை வெளிப்படைத்தன்மையுடன் உள்ளது. வங்கி, நிதி முதலீடு குறித்த விவரங்களை வெளியிட தயாராக உள்ளோம்'' என்றார்.
இந்நிலையில், ஹிண்டன்பர்க் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமமும் மறுத்துள்ளது. இது தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்ட அறிக்கையில், ''எங்கள் மீது ஹிண்டன்பர்க் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை மற்றும் உள்நோக்கம் கொண்டவை ஆகும். ஹிண்டன்பர்க் முன்பு கூறிய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்துள்ளது.
எங்கள் நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடுகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மை கொண்டது. இப்போது ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ள தனிநபர்களுடன் அதானி குழும நிறுவனங்கள் எந்த வணிக உறவும் வைத்துக் கொள்ளவில்லை. அனைத்து சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதில் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்'' என்று கூறப்பட்டுள்ளது.