மின்கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன்?.. அடுக்கடுக்கான காரணங்களை பட்டியலிட்டு மின்வாரியம் விளக்கம்!

'தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி 6 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்த வழி இருந்தும், சென்ற ஆண்டு 2.18 சதவீதம் மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது' என்று மின்வாரியம் கூறியுள்ளது.

Jul 16, 2024 - 07:50
Jul 18, 2024 - 10:47
 0
மின்கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன்?.. அடுக்கடுக்கான காரணங்களை பட்டியலிட்டு மின்வாரியம் விளக்கம்!
tamilnadu eb bill hike

சென்னை: தமிழ்நாட்டில் மின் கட்டணம் 4.83 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் நேற்று அறிவித்தது. இதற்கு பொதுமக்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், மின்கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன்? என்பது குறித்து தமிழ்நாடு மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''கடந்த 2011-12 ஆம் ஆண்டில் ரூ.18,954 கோடியாக இருந்த தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டு மொத்த நிதி இழப்பானது, கடந்த 10 ஆண்டுகளில், ரூ.94.312 கோடி மேலும் அதிகரித்து, 31.03.2021 வரை ரூ.1.13,266 கோடியாக உயர்ந்தது. 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி இழப்பினை, 2021-22 ஆம் ஆண்டிலிருந்து 100% முழுமையாக அரசே ஏற்று கொள்ளும் என்ற தற்போதைய தமிழக அரசின் உறுதிப்பாட்டை போல, முந்தைய காலத்தில் எவ்வித உறுதிப்பாடும் வழங்காத காரணத்தினால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்து கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

இதன் விளைவாக, 2011-12ம் ஆண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் மின் தொடரமைப்பு கழகத்திற்கு ரூ.43,493 கோடியாக இருந்த கடன் தொகையானது கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்து (2021-22) வரை ரூ.1,59,823 கோடியாக மாறியது. இதன் விளைவாக, கடந்த 2011-12-ஆம் ஆண்டில் ரூ.4.588 கோடியாக இருந்த கடன்களின் மீதான வட்டியானது 259% அதிகரித்து 2020-21-ஆம் ஆண்டில் ரூ.16,511 கோடியாக அதிகரித்தது.

இவ்வாறு அதிகரித்துவரும் நிதி இழப்பை ஈடு செய்ய அப்போதைய மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதன் பின்னர், அதிகமான மின்கட்டண உயர்வினால் மின் நுகர்வோருக்கு ஏற்படக் கூடிய சுமையினை கருத்தில் கொண்டு, இந்த அரசானது நுகர்வோருக்கு பெரும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆண்டு தோறும் சிறிய அளவில் மின் கட்டண உயர்வை அமல்படுத்தி வருகிறது.

ஒன்றிய அரசின் மின் அமைச்சகத்தின் வழி காட்டுதல்களின்படி, விநியோக முறையை வலுப்படுத்தும் (RDSS) திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசின் நிதியை பெறுவதற்காக ஆண்டுதோறும் மின் கட்டணம் திருத்தம் செய்வது முன் நிபந்தனையாகும்.இந்த வகையில், 2022-23 நிதி ஆண்டிற்கான மின் கட்டண உயர்வானது, 01.04.2022 10.09.2022 முதல் சுமார் 7 மாதத்திற்கு மட்டுமே உயர்த்தப்பட்டது.

மேலும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பல்லாண்டு மின் கட்டண வீத ஆணையின்படி கடந்த 01.07.2023 முதல் நுகர்வோர் விலை குறியீடு எண் அடிப்படையில், அணைத்து மின்னிணைப்புகளுக்கும் உயர்த்தப்பட வேண்டிய 4.7 சதவீத மின் கட்டண உயர்வுக்கு எதிராக, மின் நுகர்வேயின் நலனை கருத்தில் கொண்டு 2.18 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டது. 

வீடுகளுக்கான இந்த 2.18 சதவீத உயர்வும் முழுவதுமாக இந்த அரசே மின் மானியம் மூலம் ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி 6 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்த வழி இருந்தும், சென்ற ஆண்டு 2.18 சதவீதம் மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. 

மேலும், இந்த ஆண்டு 2024 ஜூலை மாதத்தைப் பொறுத்த வரையில், 2023 ஏப்ரல் மாதத்தின் விலை குறியீட்டு எண் 178.1 மற்றும் 2024 ஏப்ரல் மாதத்தின் விலை குறியீட்டு எண் 186.7 ஆகியவற்றின் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின் படி கணக்கிட்டால், 4.83 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.

இதன்படி, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டணத்தை மறுசீரமைப்பதினால் பொதுமக்களுக்கும். தொழில் முனைவோருக்கும் சிறிய அளவே கட்டணத்தை உயர்த்தி 15.07.2024 தேதியிட்ட மின் கட்டண ஆணை 6:6/2024 ஐ வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 2.47 கோடி வீடுகள் மற்றும் குடிசை மின்நுகர்வோரில் 1 கோடி நுகர்வோர்களுக்கு மின்கட்டண உயர்வு எதுவும் இல்லை. அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்'' என்று மின்வாரியம் கூறியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow