’இந்த விஷயத்தில் நாங்களும், காங்கிரசும் ஒன்றுதான்’.. பாகிஸ்தான் அமைச்சர் பேச்சு!

பாகிஸ்தான் ராணுவ அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா, ’’பாகிஸ்தானுக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது? ஜம்மு-காஷ்மீர் பாகிஸ்தானின் பகுதி அல்ல; அவர்கள் (பாகிஸ்தான்) முதலில் தங்கள் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்’’ என்றார்.

Sep 19, 2024 - 22:04
Sep 19, 2024 - 22:06
 0
’இந்த விஷயத்தில் நாங்களும், காங்கிரசும் ஒன்றுதான்’.. பாகிஸ்தான் அமைச்சர் பேச்சு!
Khawaja Asif

இஸ்லாமாபாத்: ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளில் 3 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக  24 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு அங்கு முதன்முறையாக சட்டப்பேரவை தேர்தல் நடந்ததால் ஏராளமான மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 60.21% வாக்குகள் பதிவாகின. 

முன்னதாஜ, காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருந்தன. இந்த தேர்தல் அறிக்கையில், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்’என்று கூறப்பட்டுள்ளது.  இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப், அந்த நாட்டில் ஒரு செய்தி சேனலுக்கு பேட்டியளித்தார்.

அப்போது ஜம்மு-காஷ்மீர் தேர்தல் குறித்தும், சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த கவாஜா ஆசிப், ’காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பழைய வலிமையை ஜம்மு-காஷ்மீர் பெற வாய்ப்புள்ளது. இது சாத்தியம்தான். இந்த இரண்டு கட்சிகளும் அங்கு பெரிய முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்த விஷயத்தில் பாகிஸ்தானின் எண்ணமும், காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சிகளின் எண்ணமும் ஒன்றாக உள்ளன’’என்று கூறியிருந்தார். 

இதற்காகவே காத்திருந்த பாஜக, பாகிஸ்தான் ராணுவ அமைச்சரின் பேச்சை மிகச்சிறப்பாக கையில் எடுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் கட்ரா பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, ’’ஜம்மு-காஷ்மீரில் நமது தலைமுறையை அழித்து ரத்தம் சிந்தவைக்க பாகிஸ்தான் விரும்புகிறது. அவர்களின் அஜெண்டாவே அதுதான். பாகிஸ்தானின் அஜாண்டாவை நிறைவேற்ற காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சிகள் இலக்காக கொண்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தானின் அஜெண்டாவை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று நான் கடுமையாக எச்சரிக்கை விடுக்கிறேன். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 360ஐ மீண்டும் கொண்டு வர இந்த பூமியில் யாருக்கும் அதிகாரம் இல்லை’’என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த  தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா, ’’பாகிஸ்தானுக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது? ஜம்மு-காஷ்மீர் பாகிஸ்தானின் பகுதி அல்ல; அவர்கள் (பாகிஸ்தான்) முதலில் தங்கள் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும். ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் தலையிடுவதோ, கருத்து தெரிவிக்கவோ அவசியம் இல்லை. எங்கள் நாட்டின் பிரச்சனையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’’என்றார்.

முன்னதாக பேசிய தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, ‘’ஜம்மு-காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் என்ன சொன்னது? என்பது எனக்கு தெரியாது. ஏனெனில் நான் பாகிஸ்தானியர் அல்ல; இந்திய குடிமகன்’’என்று தெரிவித்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow