கேரள மாநிலம் கோட்டயம் பகுதியிலுள்ள அரசு செவிலியர் கல்லூரியில் கடந்த 3 மாதங்களாக தங்களுக்குத் தொடர்ந்து ராகிங் கொடுமை நடப்பதாக முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் 3 பேர் காவல்துறையில் புகாரளித்தனர்.
இதில், கடந்த நவம்பர் மாதம் முதல் தங்கள் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் நிர்வாணமாக நிற்கவைத்து உடற்பயிற்சி செய்யும் டம்பிள்களை வைத்து தாக்கியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.மேலும், காம்பஸ் மற்றும் கத்தி போன்றவற்றால் தங்களை குத்திக் காயப்படுத்தியதாகவும் முகம், தலை, வாய் முழுக்க க்ரீம் தடவி கொடுமைப்படுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அந்த மாணவர்களின் உடலில் காயம் ஏற்பட்ட தழும்புகள் இருந்துள்ளன. அதுமட்டுமின்றி மது அருந்துவதற்காக ஜூனியர் மாணவர்களை மிரட்டி அவர்களிடமிருந்து தொடர்ந்து பணம் பறித்து அடித்து துன்புறுத்தி வந்தனர்.
இந்தக் கொடுமைகளை மேலும் பொறுத்துக்கொள்ள முடியாததால் காவல்துறையில் புகாரளித்ததாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் 3 பேரும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த கோட்டயம் பகுதி காவல்துறையினர் 5 மாணவர்களை இன்று கைது செய்தனர்.