Vinesh Phogat : 200 நாட்கள் ஆகிவிட்டன; எனக்கு வேதனையாக இருக்கிறது - வினேஷ் போகத் உருக்கம்
Vinesh Phogat Joins Farmers Protest at Shambhu Border : உரிமைக்காக 200 நாட்கள் போராட்டம் நடத்துவதை பார்க்கும்போது எனக்கு வேதனையாக இருக்கிறது என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.

Vinesh Phogat Joins Farmers Protest at Shambhu Border : பஞ்சாப் - ஹரியானாவின் ஷம்பு எல்லையில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்தின் 200ஆவது நாள் கொண்டாட்டத்தில் அரசியல் நிகழ்ச்சியில் ஒலிம்பிக் பதக்கத்தை இழந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பங்கேற்றார். வினேஷ் போகத்திற்கு மாலை அணிவித்து விவசாயிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து விவசாயிகள் முன்பு உரையாற்றிய வினேஷ் போகத், “உங்களுடைய போராட்டம் இன்று 200 நாளை நிறைவு செய்கிறது. உங்கள் நீதிக்காக, உரிமைக்காக நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்ததை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். உங்கள் மகள் உங்களுடன் இருக்கிறாள் என்பதை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
நீங்கள் இங்கே உட்கார்ந்து 200 நாட்கள் ஆகிவிட்டன. இதைப் பார்க்கும்போது எனக்கு வேதனையாக இருக்கிறது. விவசாயிகள் அனைவரும் இந்த நாட்டின் குடிமக்கள். விவசாயிகள்தான் நாட்டையே வழிநடத்துகிறார்கள். விவசாயிகள் இல்லாமல் நாட்டில் எதுவும் சாத்தியமில்லை. விவசாயிகள் உணவளிக்கவில்லை என்றால் விளையாட்டு வீரர் - வீராங்கனைகள் ஆகிய நாங்கள் போட்டியில் களமிறங்க முடியாது.
அதேபோல இந்த நாட்டின் குடிமக்கள், ஒவ்வொரு முறையும் அவர்களது குரல்களை உயர்த்துவது அரசியலுக்காக இல்லை என்பதை அரசுக்கு வலியுறுத்துகிறேன். குறிப்பாக விவசாயிகளின் கோரிக்கை சட்டவிரோதமானது இல்லை. அரசு அவற்றை காதுகொடுத்து கேட்க வேண்டும். இவ்வளவு பெரிய அளவில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாயிகள் சோகமாக இங்கு போராடுவதை காண்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. விவசாயிகள் இப்படி தெருவில் அமர்ந்தால் நாடு முன்னேறாது” என பேசினார்.
தொடர்ந்து விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான சர்வான் சிங் பந்தர் கூறுகையில், ”போராட்டம் அமைதியான முறையில் அதே நேரத்தில் தீவிரமாகவும் நடந்து வருகிறது. எங்களின் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஒன்றிய அரசு எங்களின் உறுதியை சோதிக்கிறது.
காற்று, மழை, குளிர் அனைத்தையும் மீறி நாங்கள் 200 நாட்கள் அமைதியான முறையில் இங்கே போராடி வருகிறோம். எங்களுக்கு இது மிகப்பெரிய வெற்றி. வினேஷ் போகத் இங்கே வந்திருக்கிறார். நாங்கள் அவரை வாழ்த்தினோம். விவசாயிகளின் மகள் விவசாயிகளுடன் நிற்பாள்” என கூறினார்.
What's Your Reaction?






