இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான ’ரூமி 1’ என்ற ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
Indias First Hybrid Rocket Mission Rhumi 1 Launch : தமிழ்நாட்டின் தனியார் நிறுவனமான ‘ஸ்பேஸ் ஜோன் இந்தியா’ மற்றும் மார்ட்டின் குழுமம் இணைந்து வடிவமைத்துள்ள ‘மிஷன் ரூமி’ ராக்கெட் , இன்று காலை 7 மணிக்கு சென்னையில் உள்ள திருவிடந்தை பகுதியில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய பின் மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் தயாரிக்க்ப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட ’ரூமி 1’ ராக்கெட் மூன்று க்யூப் செயற்கைக்கோள்கள் மற்றும் வெவ்வேறு சிறிய எடை கொண்ட செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலை நிறுத்தியுள்ளது.
இந்த ராக்கெட் காஸ்மிக் கதிர்சீச்சின் தீவிரம், புற ஊதா கதிர்வீச்சின் தீவிரம், காற்றின் தரம் மற்றும் வளிமண்டல நிலைகளை ஆய்வு செய்யும்.
ரூமி 1-ல் என்ன ஸ்பெஷல்?
மிஷன் ரூமிக்காக மூன்மேன் என்றழைக்கப்படும் இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையின் வழிகாட்டுதலின் கீழ் இந்த ராக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
3.5 மீட்டர் நீளமுள்ள இந்த 80 கிலோ ராக்கெட்டில் 70% வரை மறுசுழற்சி ஆகக்கூடியது. அதாவது ராக்கெட்டின் முக்கிய பகுதியான செயற்கைக்கோள்கள் அடங்கிய ராக்கெட்டின் மூக்கு பகுதி வெற்றிகரமாக ஏவப்பட்ட பிறகு, மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து கடலில் விழும். அங்கிருந்து இந்த பாகங்களை மீண்டும் சேகரித்து மற்றொரு விமானத்திற்கு பயன்படுத்தலாம். இது எதிர்கால விமானச் செலவுகளை வெகுவாகக் குறைக்கும்.
ரூமி 1 ராக்கெட் 35 கிமீ உயர சுற்றுப்பாதை வரை பறக்கும். ரூமி 1-ஐ வெற்றிகரமாக செலுத்திய பின், ‘ஸ்பேஸ் ஜோன் இந்தியா' நிறுவனம் ’ரூமி 2’ ராக்கெட்டை உருவாக்கி வருகிறது, இது 250 கிலோ எடையை சுமந்து 250 கிமீ உயரத்தை எட்டும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: இந்திரா காந்திக்காக விமானத்தையே கடத்தியவர் போலாநாத் மறைவு..கடத்தலின் கதை இதுதான்!
மேலும், டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் மாணவர்கள் செயற்கைக்கோள் ஏவுதல் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ராக்கெட்டை வடிவமைப்பதில் பங்களித்துள்ளனர்.