Indian Cricketer Shikhar Dhawan Retirement : இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக கலக்கியவர் ஷிகர் தவான். இடது கை ஆட்டக்காரரான இவர், இந்திய அணிக்கு வலிமையான ஓபனராக திகந்தார். சச்சின் – சேவாக் கூட்டணிக்குப் பின்னர், ஓபனிங்கில் இந்திய அணிக்கு பெரும் பலம் சேர்த்தவர். 1985 டிசம்பர் 5ம் தேதி பிறந்த ஷிகர் தவான், தனது 38வது வயதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த ஷிகர் தவான் 17, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடி கவனம் ஈர்த்தார். அதன்பின்னர் 2010 விசாகப்படிணத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானா ஷிகர் தவான்.
முதல் போட்டியிலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சிக்கொடுத்த ஷிகர் தவான், அடுத்தடுத்த ஆட்டங்களில் தன்னை மெருகேற்றினார். இதுவரை 167 பேட்டிகளில் விளையாடியுள்ள ஷிகர் தவான், 164 இன்னிங்ஸில் பேட்டிங் செய்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 17 சதங்கள், 39 அரை சதங்களுடன் மொத்தம் 6793 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 143 ரன்கள் எடுத்துள்ள ஷிகர் தவானின் பேட்டிங் ஆவரேஜ் 44.11 சதவீதம் ஆகும். 2015ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த ஷிகர் தவான், 2013, 2017ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் அதிக ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்.
அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் போட்டியிலேயே அதிவேகமாக சதம் அடித்து ஆஸ்திரேலிய பவுலர்களை மிரள விட்டார். 2013ம் ஆண்டு மொஹாலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தை ஆடினார். அதில், 174 பந்துகளில் 187 ரன்கள் குவித்து சாதனை படைத்த ஷிகர், தொடர்ந்து பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 34 போட்டிகளில் 58 இன்னிங்ஸ்கள் விளையாடியுள்ள ஷிகர் தவான், மொத்தம் 2315 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 7 சதங்களும் 5 அரை சதங்களும் அடங்கும்.
ஒருநாள், டெஸ்ட் போட்டிகளை போல டி20 கிரிக்கெட்டிலும் தனது அதிரடி மூலம் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் ஷிகர் தவான். டி20 கிரிக்கெட்டில், இந்திய அணிக்காகவும் ஐபிஎல் போட்டிகளிலும் ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் இதுவரை டெல்லி, மும்பை இண்டியன், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைஸர்ஸ், பஞ்சாப் ஆகிய 5 அணிகளுக்காக விளையாடியுள்ளார். கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாய் அணியை கேப்டனாக வழிநடத்தியிருந்தார். இந்தாண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைத்துவிதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவித்துள்ளார்.
2014ம் ஆண்டுக்கான விஸ்டன் கிரிக்கெட் வீரர் விருது, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபில் அதிக ரன்கள் குவித்த வீரருக்காக இரண்டு கோல்டன் பேட் விருது, 2021ம் ஆண்டு அர்ஜுனா விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார் ஷிகர் தவான். கபார், மொட்ட மாம்ஸ் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஷிகர் தவான், ஆயிஷா முகர்ஜி என்பவரை திருமணம் செய்திருந்தார். ஷிகர் தவானை விட 12வயது மூத்தவரான ஆயிஷா முகர்ஜி தனது முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், ஷிகர் தவான் அவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். சில ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி, கடந்தாண்டு விவாகரத்து பெற்று பிரிந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது ஓய்வு குறித்து வீடியோ வெளியிட்டுள்ள ஷிகர் தவான், எனது கிரிக்கெட் பயணத்தின் இந்த அத்தியாயத்தை நான் முடிக்கும் போது, எண்ணற்ற நினைவுகளையும் நன்றியையும் சுமக்கிறேன். அனைவரது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற்ற ஷிகர் தவானுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.