திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்புகள்... வெளியான ஆய்வு முடிவுகள்... அதிர்ச்சியில் பக்தர்கள்!

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்புகள், மீன் எண்ணெய் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Sep 20, 2024 - 00:58
 0
திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்புகள்... வெளியான ஆய்வு முடிவுகள்... அதிர்ச்சியில் பக்தர்கள்!

ஆந்திர மாநிலத்தின் அடையாளமான திருப்பதியில் லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இது ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதலமைச்சராக இருந்தபோது நடந்ததாக, தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அதாவது, “2019 முதல் 2024 வரையிலான ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆட்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மிகவும் புனிதமான திருமலை ஏழுமலையான் கோயிலில், ஜெகன் நிர்வாகம் பிரசாதத்தில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஜெகன், ஒய்எஸ்ஆர்சிபி அரசை பார்த்து வெட்கப்படுகிறேன்” என்று சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார்.
 
அவரது குற்றச்சாட்டுகளை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மறுத்திருந்தது. மேலும், திருமலையின் புனிதத்தையும் பல கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் சந்திரபாபு நாயுடு கொச்சைப்படுத்தி பேசியுள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், திருப்பதி லட்டுவில் மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு இருந்தது ஆய்வில் உறுதியாகியுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இந்த ஆய்வின் முடிவில், மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு, பன்றிக்கொழுப்பு என லட்டு செய்ய பயன்படுத்தும் நெய்யில் விலங்குகளின் கொழுப்புகள் கலக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கொடுத்த நெய் என்பது உண்மையிலேயே திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தும் நெய் தானா? அல்லது அரசியல் செய்வதற்காக ஏதோ ஒரு நெய்யை கொடுத்து அது திருப்பதி லட்டில் பயன்படுத்தப்படும் நெய் என்று தெலுங்கு தேசம் கட்சியே கூறுகிறதா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

எதுவாக இருந்தாலும், திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை முடிவுகளை கண்ட பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து, பலரும் ஜெகன்மோகன் ரெட்டியையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியையும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். “இதுதான் நீங்க நடத்திய ஆட்சியின் லட்சணமா? திருப்பதி கோயிலின் புனிதத்தை கெடுத்துவிட்டீர்களே?” இது நியாயமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து ஜெகன் மோகனும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸும் என்ன பதில் சொல்லப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow