Suresh Gopi : “சினிமா இல்லை என்றால் நான் செத்துவிடுவேன்” - சுரேஷ் கோபி பேச்சால் பரபரப்பு
Union Minister Suresh Gopi MP : அமைச்சர் பதவியா? சினிமாவா? என்று பார்த்தால் எனக்கு சினிமாதான் முக்கியம் என மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Union Minister Suresh Gopi MP : நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கருணாகரனின் மகன் முரளிதரன் தோல்வியடைந்தார். கேரளா மாநிலத்தில் முதன் முறையாக தாமரையை மலர வைத்த சுரேஷ் கோபிக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.
அவருக்கு பெட்ரோலிய துறை இணை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் கேரளாவில் நடைபெற்ற கேரள திரைப்பட வர்த்தக சபை நடத்திய நிகழ்ச்சியில் நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி கலந்து கொண்டார். திரைப்படங்களில் நடிப்பதால், தன்னுடைய அமைச்சர் பதவி பறிபோனாலும், தனக்கு மகிழ்ச்சிதான் என்று அவர் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
விழாவில் பேசிய அவர், “என்னிடம் பல கதைகள் வந்தன. இதில் சுமார் 20-22 படங்களில் எனக்கு நடிக்க விருப்பம் இருக்கிறது. இந்த படங்களில் நடிக்க நான் ஒப்புக் கொண்டு இருக்கிறேன். இதற்கு அனுமதி கேட்டு நான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை கடிதத்தைக் கொடுத்தேன். அப்போது அவர் எத்தனை படங்களில் நடிக்க வேண்டும் என்று கேட்டார். 22 படங்களில் நடிக்க வேண்டும் எனச் சொன்னேன். இதைக் கேட்டதும் எனது லெட்டரை அப்படியே ஓரத்தில் போட்டுவிட்டார். அவர் டென்ஷனாகிவிட்டார் என்றே நினைக்கிறேன். ஆனால், அனுமதி வழங்குவதாகவே அமித் ஷா சொன்னார். செப்டம்பர் 6ஆம் தேதி முதல் ஷூட்டிங்கை தொடங்க முடியும் என நம்புகிறேன்.
படப்பிடிப்பு தளத்திற்கு என்னுடன் அமைச்சரவை அலுவலகத்தில் இருந்து சில அதிகாரிகளையும் அழைத்து வரத் திட்டமிட்டுள்ளேன். இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். ஷீட்டிங் ஸ்பாட்டில் இருந்தபடி அமைச்சரவை பணிகளைக் கவனிக்க இவர்கள் உதவுவார்கள் என நம்புகிறேன். இந்த படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். ஒரு வேளை இதற்காக என்னை அமைச்சரவையில் இருந்து நீக்கினால், அது எனக்கான உதவியாகவே கருதுவேன். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்.
எனக்கு அமைச்சராக வேண்டும் என்று ஒரு போதும் ஆசை இருந்தது இல்லை.. இப்போதும் கூட எனக்கு அந்த ஆசை இல்லை. எம்பி தேர்தலில் வென்ற போது அமைச்சர் பதவியில் எனக்கு நாட்டம் இல்லை. இது குறித்துக் கேட்ட போதும் வேண்டாம் என்றே சொன்னேன். அப்போது அவர்கள்தான் இது உங்களுக்காக இல்லை.. உங்களை வெற்றி பெற வைத்த திருச்சூர் மக்களுக்கான பதவி என்றார்கள். இதன் காரணமாகவே நான் அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: தவெக கொடியில் யானைகளை அகற்ற வேண்டும்.. விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை!
தொடர்ந்து பேசிய அவர், “எனது ஆர்வம் லட்சியம் எல்லாம் சினிமா தான். அதில் தொடர்ந்து நடிப்பேன். சினிமா இல்லை என்றால் நான் செத்துவிடுவேன்” என தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?






