Bahujan Samaj Party on Vijay's TVK Party Flag : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். தனது படங்களில் அரசியலை பேசிய அவர் சில மாதங்களுக்கு முன்பு 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு கட்சி கொடி அறிமுகம் செய்யப்படும் என்று விஜய், அறிவித்து இருந்த நிலையில், எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை விஜய் இன்று அறிமுகம் செய்தார். பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இன்று காலை தவெக கொடியை அறிமுகப்படுத்திய விஜய், அதனைத் தொடர்ந்து அலுவலகத்திலும் கொடியை பறக்கவிட்டார். கட்சியின் பாடலையும் வெளியீடு செய்தார். இந்த விழாவில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி, அம்மா ஷோபா, கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக கட்சியின் உறுதிமொழியை விஜய் வாசிக்க, தவெக கழக நிர்வாகிகளும் அதை உறுதிமொழி ஏற்றனர். விஜய் கட்சி கொடியை அறிமுகம் செய்த சில மணி நிமிடங்களில் கொடியின் அமைப்பு, அதன் நிறங்கள் குறித்து சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதாவது தவெக கொடியின் மேலும் கீழும் சிவப்பு நிறமும், நடுவில் மஞ்சள் நிறமும் உள்ளது. அதேபோல், நடுவில் உள்ள மஞ்சள் நிற பகுதியில், வாகை மலரை இரண்டு போர் யானைகள் வணங்குவது போன்றும் இந்த கொடியானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வகை மலைரை சுற்றிலும் 28 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில், 5 நட்சத்திரங்கள் நீல நிறத்திலும், 23 நட்சத்திரங்கள் பச்சை நிறத்திலும் உள்ளன. தவெக கொடியில் உள்ள குறியீடுகள் குறித்து விஜய் ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கொடி, கேரள போக்குவரத்து கழகத்தின் லோகோ போன்று இருப்பதாகவும், Fevicol Logo போன்று இருப்பதாகவும் சமுகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்தனர்.
இதேபோல் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இருப்பது போல் விஜய்யின் கட்சி கொடியிலும் 2 யானைகள் இடம்பெற்றுள்ளதால் இதற்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது என கூறப்பட்டது. இந்நிலையில், தவெக கொடியில் உள்ள யானைகளை அகற்ற வேண்டும் என்று நடிகர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட அவர், ''கடந்த 1993 ஆம் ஆண்டு தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட யானை சின்னத்தை அசாம், மணிப்பூர் தவிர வேறு எந்த மாநில கட்சிகளும் எந்த வடிவிலும் கட்சி கொடியிலோ அல்லது சின்னமாகவோ பயன்படுத்த கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வந்து அறிவிப்பு வெளியிட்டது.
உண்மை இப்படி இருக்க, இந்த அறிவிப்பு குறித்து தெரியாமல், சகோதரர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியில் இரண்டு யானைகள் இடம் பெற்றிருப்பது விதிகளை மீறும் செயலாகும். மேலும், தேர்தல் காலங்கள் வாக்காளர்கள் மத்தியில் இது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, உடனடியாக தங்கள் கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானைகளை அகற்ற வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன். மீறும் பட்சத்தில் இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்க்கொள்ள பகுஜன் சமாஜ் கட்சி தயாராக உள்ளது என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்'' என்று ஆனந்தன் கூறியுள்ளார்.