குரூப்-4 தேர்வு... திமுக அரசு மெத்தனப்போக்கு... சீமான் கண்டனம்!

குரூப்-4 தேர்வு மூலம் ஆண்டுதோறும் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Sep 19, 2024 - 18:29
 0
குரூப்-4 தேர்வு... திமுக அரசு மெத்தனப்போக்கு... சீமான் கண்டனம்!
குரூப்-4 தேர்வு... திமுக அரசு மெத்தனப்போக்கு... சீமான் கண்டனம்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அரசுத்துறைகளில் மூன்றரை இலட்சத்திற்கும் மேல் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், குரூப்-4 தேர்வு மூலம் நடப்பாண்டில் வெறும் 6244 பணியிடங்கள் மட்டுமே நிரப்பும் திமுக அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. ஆட்சிக்கு வந்தால் இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவோம் என வாக்குறுதி அளித்த திமுக, அதிகாரத்தை அடைந்த பிறகு அதனை நிறைவேற்ற மறுப்பது வாக்களித்து ஆட்சியில் அமர்த்திய இளைஞர்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் நடத்தி அரசுத்துறைகளில் காலியாக உள்ளப் பணியிடங்களை தமிழ்நாடு அரசு, ஒவ்வொரு ஆண்டும் நிரப்பி வருகிறது. முந்தைய அதிமுக அரசு 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் சராசரியாக 10000 பணியிடங்கள் என்ற அளவில் பணியிடங்களை நிரப்பி வந்தது. அதுமட்டுமின்றி, கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் எவ்வித அரசுத்தேர்வும் நடைபெறவில்லை. மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் ஓய்வுபெற்றோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களும் 3.5 இலட்சம் என்ற அளவுக்கு தற்போது உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலைவாய்ப்பினை இழந்த இளைஞர்கள் பலரும் அரசுப் பணியில் சேர முயன்று வருவதால் போட்டித் தேர்வர்களின் எண்ணிக்கையும் பல இலட்சக்கணக்கில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தால் மூன்றரை இலட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இதனால் அதிக காலிப்பணியிடங்களுக்குப் போட்டித் தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாட்டு இளைஞர்கள் எதிர்பார்த்த நிலையில், இரண்டாண்டு கொரோனா இடைவெளிக்குப் பிறகு 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் வெறும் 10000 பணியிடங்களுக்கு மட்டுமே ஆட்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்தது. குறைந்தபட்சம் 15000 பணியிடங்களையாவது நிரப்ப வேண்டும் என்ற தேர்வர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த திமுக அரசு, தேர்வு முடிவையும் 8 மாதங்கள் தாமதித்து வெளியிட்டுப் பெருங்கொடுமை புரிந்தது. இதனால் இரவு பகலாக கண்துஞ்சாது படித்து, கடுமையாக உழைத்த அன்புத்தம்பி-தங்கைகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

தற்போது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசுத்துறைகளில் ஏறத்தாழ 3.5 இலட்சம் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் ஆண்டுக்கு 10,000 என்றால் எஞ்சியுள்ள 2 ஆண்டுகளில் திமுக அரசால் வெறும் 20,000 பணியிடங்களை மட்டுமே நிரப்ப முடியும். எனில், தேர்தலின் போது திமுக அளித்த இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை எப்போது நிறைவேற்றப்போகிறது? கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசால் நிரப்பப்பட்ட காலி பணியிடங்களை விட, ஓய்வு பெறுவதினால் உருவான காலி பணியிடங்கள் பன்மடங்கு அதிகம். அரசுத்துறைகள் சிறப்பாகச் செயல்பட ஊழியர் பற்றாக்குறையைப் போக்கி காலி பணியிடங்களே இல்லை என்ற சூழலை உருவாக்க வேண்டுமா இல்லையா? கார் பந்தயம் நடத்துவதிலும், காசு வெளியிடுவதிலும் கவனம் செலுத்தும் திமுக அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவதில் கவனம் செலுத்தாதது ஏன்? தங்கள் இளைஞரணித் தலைவருக்கு பட்டம் சூட்டி துணை முதல்வராக்க போட்டி போடும் திமுக அமைச்சர் பெருமக்கள், இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்பினை பெறும் போட்டித்தேர்வு பணியிடங்களை அதிகரிப்பதில் அதே அளவு ஆர்வத்தை, அக்கறையை காட்டாதது ஏன்? என்ற கேள்வி ஒவ்வொரு இளைய தலைமுறை பிள்ளைகளிடமும் எழுகிறது.

மேலும் படிக்க: இந்தியாவில் இரண்டாவது குரங்கம்மை பாதிப்பு... அச்சத்தில் பொதுமக்கள்! 

ஆகவே, அரசுத்துறைகளில் காலியாக உள்ள 3.5 இலட்சம் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பவும், போட்டித்தேர்வுக்கு முயற்சிக்கும் இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் வாழ்வில் ஒளியேற்றவும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு மூலம் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 30000 பணியிடங்களுக்கு தேர்வு நடத்த அரசாணை வெளியிட வேண்டுமெனவும், அரசுப்பணியாளர்கள் ஓய்வுபெறும் வயதை 58 ஆகக் குறைக்க வேண்டுமெனவும் இவ்வறிக்கையின் வாயிலாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow