இந்தியாவில் இரண்டாவது குரங்கம்மை பாதிப்பு... அச்சத்தில் பொதுமக்கள்!

துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த 38 வயதுடைய நபர் ஒருவருக்கு குரங்கம்மை இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

Sep 19, 2024 - 18:18
 0
இந்தியாவில் இரண்டாவது குரங்கம்மை பாதிப்பு... அச்சத்தில் பொதுமக்கள்!
இந்தியாவில் இரண்டாவது குரங்கம்மை பாதிப்பு... அச்சத்தில் பொதுமக்கள்!

கடந்த சில ஆண்டுகளாக புதுப்புது வைரஸ்கள் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், அந்த பட்டியலில் தற்போது சேர்ந்திருப்பது குரங்கம்மை. ஆப்பிரிக்க நாடான காங்கோவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட குரங்கம்மை தொற்று, இப்போது மற்ற நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டத் தொடங்கியுள்ளது. குரங்கம்மைக்கு 100க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியுள்ளதால் உலக சுகாதார மையமும் விழித்துக் கொண்டுள்ளது. 

குரங்கம்மை நோய்(Monkey Pox) குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி உலக நாடுகள் அனைத்துக்கும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக மக்களுக்கு புதிய வில்லனாக உருவெடுத்துள்ள குரங்கம்மை, இந்தியாவிலும் தனது கொடூர கால்களை பதித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த இளைஞருக்கு குரங்கம்மை அறிகுறிகள் இருப்பதாக தெரியவந்தது. 

அவருடைய ரத்த மாதிரிகள் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. பரிசோதனையின் முடிவில் அந்த இளைஞருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து விளக்கம் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்,  'இளைஞருக்கு கிளாட் 2 வகை தொற்று பாதிப்பு தான் கண்டறியப்பட்டுள்ளது. இது  உலக சுகாதார நிறுவனம்(WHO) எச்சரித்துள்ள வகைப்பாட்டைச் சேர்ந்தது இல்லை. அந்த நபர் நலமுடன் உள்ளார். பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை’என்று கூறியிருந்தது. 

இந்நிலையில் கடந்த வாரம் துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த 38 வயதுடைய நபர் ஒருவருக்கு குரங்கம்மை இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் இவருக்கு குரங்கம்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தனிமைப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அப்படிப் பார்க்கும்போது இந்தியாவில் இது இரண்டாவது குரங்கம்மை பாதிப்பாகும். 

மேலும் படிக்க: எலான் மஸ்க் நிறுவனத்தின் Blindsight Device... பெருமைப்படுத்திய அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்!

குரங்கம்மை அறிகுறிகள்:

காய்ச்சல், தலைவலி, முதுகுவலி, தசைவலி போன்றவை ஆரம்பகால நோய் அறிகுறிகளாகும். காய்ச்சல் வந்தவுடன், தடிப்புகள் ஏற்படும். உடலின் மற்ற இடங்களில் பரவுவதற்கு முன்பு முகத்தில்தான் தடிப்புகள் ஏற்படும். உள்ளங்கை, கைகள் மற்றும் உள்ளங்கால்களிலும் இந்த அம்மை பரவும். இந்த தடிப்புகள் அரிப்பையும், வலியையும் ஏற்படுத்தும். சில நேரங்களில் இந்த நோய் உயிரைக்கொல்லும் தொற்றாக மாறிவிடும் எனவும் குறிப்பாக குழந்தைகள் போன்ற மிகவும் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு அதிக அச்சுறுத்தலை இந்த அம்மை நோய் ஏற்படுத்தும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow