'ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வபெருந்தகைக்கு தொடர்பு'.. பகுஜன் சமாஜ் பரபரப்பு குற்றச்சாட்டு!

''காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் திமுக அங்கம் வகிப்பதால், செல்வபெருந்தகையை கைது செய்வதில் ஆளும் கட்சியான திமுகவும், காவல் துறையினரும் தயக்கம் காட்டி வருகின்றனர். ஆகவே செல்வபெருந்தகையை காங்கிரசில் இருந்து நீக்க வேண்டும்'' என்று கடிதத்தில் கூறப்படுள்ளது.

Sep 19, 2024 - 21:00
Sep 19, 2024 - 21:02
 0
'ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வபெருந்தகைக்கு தொடர்பு'.. பகுஜன் சமாஜ் பரபரப்பு குற்றச்சாட்டு!
Selvaperunthagai

சென்னை: பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு நின்றபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பரபரப்பான சென்னை மாநகரில் காவல் நிலையம் அருகே நடந்த இந்த கொலை தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

பிரபல ரவுடி ஆற்காடு ரவுடி சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.  ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முதற்கட்டமாக புன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதன்பிறகு அதிமுக பேச்சாளரும் மறைந்த பிரபல தாதாவுமான தோட்டம் சேகரின் மனைவியுமான வழக்கறிஞர் மலர்கொடி, திமுக இலக்கிய அணியின் துணை அமைப்பாளரான குமரேசனின் மகன் சதீஷ், மேலும் பிரபல பெண் ரவுடியும், முன்னாள் வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி செயலாளருமான புளியந்தோப்பு அஞ்சலை என அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு ரவுடிகளுக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகைக்கு தொடர்புள்ளதாகவும், அவரை உடனடியாக கட்சியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘’தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வரும் செல்வபெருந்தகை, கடந்த 2008ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்துள்ளார். மேலும் இவர் புரட்டி பாரதம் கட்சி, புதிய தமிழகம் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்துள்ளார்.

ஆடிட்டர் பாண்டியன், ஆல்பர்ட், சங்கர் உள்பட பல்வேறு கொலை வழக்குகளில் செல்வபெருந்தகைக்கு தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. சில வன்முறை கும்பல்களை பயன்படுத்தி வட தமிழ்நாட்டில் இவர் ரியல் எஸ்டேட் தொழில்களில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். ரவுடி நாகேந்திரன் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் உள்ளார். அவர் தனது மகனும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில பொறுப்பாளர் (இளைஞரணி) அஸ்வத்தாமனை பயன்படுத்தி தொழில் அதிபர்களை மிரட்டுதல், பொதுமக்களை மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வந்தார். 

அஸ்வத்தாமனை காங்கிரஸ் கட்சியில் பொறுப்பாளராக நியமித்தது  செல்வபெருந்தகை தான். அஸ்வத்தான் தனது தந்தை நாகேந்திரனுக்கும்,  செல்வபெருந்தகைக்கும் வேலை செய்து வந்தார். பழைய இரும்பு பொருட்களை ஸ்கிராப் செய்தல் உள்ளிட்ட தொழிலை செய்து வந்த  அஸ்வத்தாமன் தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறித்து அதில் ஒரு பங்கை செல்வபெருந்தைக்கும் வழங்கியுள்ளார். இந்நிலையில், ஆம்ஸ்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய செல்வபெருந்தகையை ஏன் கைது செய்யவில்லை? என்று தமிழ்நாட்டு மக்களும், சமுகவலைத்தளங்களும் கேள்வி எழுப்புகின்றன. 

ஆனால் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் திமுக அங்கம் வகிப்பதால்,  செல்வபெருந்தகையை கைது செய்வதில் ஆளும் கட்சியான திமுகவும், காவல் துறையினரும் தயக்கம் காட்டி வருகின்றனர். ஆகவே செல்வபெருந்தகையை காங்கிரசில் இருந்து நீக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow