ஆளுநருக்கு ஒரு கருத்து.. உதயநிதிக்கு ஒரு கருத்தா? முதல்வர் செய்வாரா? எச். ராஜா கேள்வி!
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநரை திரும்பப் பெற கோரிய முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை இடை நீக்கம் செய்வாரா? என தமிழக பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அமைந்தகரையில், தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா, பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் அடிப்படை உறுப்பினர் சேர்க்கை, தீவிர உறுப்பினர் சேர்க்கை, தேர்தல் சம்பந்தமான மாவட்ட பயிலரங்கங்கள், பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்டவை குறித்து மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் விவாதிக்கப்பட்டது. மேலும், தேசிய, மாநிலம், மாவட்டம் மற்றும் மண்டல அளவில் தேர்தலுக்கான அமைப்பு பணிகளின் தேதிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதன்பட தேர்தல் அதிகாரிகள் நியமனம், அமைப்பு பருவ தேர்தல் பயிலரங்கம், தீவிர உறுப்பினர் சேர்க்கைக்கான அமைப்பு மற்றும் தேதிகள் குறித்து அறிவிக்கப்பட்டன.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச். ராஜா, “ஆண்டவன் இருக்கான் டா குமார் என்பது போல, ஒருவாரத்தில் இப்படி நடக்கும் என்பது எப்படி? நாமக்கல் கவிஞர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட நிகழ்வில், ‘திராவிட நல் திருநாடு’ என்பது விட்டு போச்சு. தூர்தர்ஷன் நிகழ்ச்சியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இனவாத அரசியலை ஊக்குவித்து, இனச்சாயம் பூசி கருத்துகள் தெரிவிக்கப்பட்டது. ஆளுநரை மாற்ற வேண்டும் என அறிக்கை விடுத்தார் முதல்வர். ஆனால் இன்று (அக். 25) உதயநிதி ஸ்டாலின் செய்தது தவறு என முதல்வர் ஸ்டாலின் சொல்வாரா? இப்போது அட குலத்தை கெடுக்க வந்த கோடாலி காம்பே என முதல்வர் தன் மகனை திட்டுவாரா? நீங்கள் எரிகின்ற பந்து, அதே வேகத்தில் உங்களை வந்து அடிக்கும்... என்பதை திமுக ஸ்டாக் புரிந்துகொள்ள வேண்டும்.
உதயநிதி எப்படியெல்லாம் பேசினார் என்பதை மறக்க முடியாது. நான் திராவிடியன் ஸ்டாக் போல அநாகரிகமான ஆள் இல்லை. ஆளுநரை திரும்பப் பெறக் கோரிய முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை இடை நீக்கம் செய்யுங்கள். உங்களுக்கு தமிழ் பற்று இருக்கிறது என்றால் உங்கள் மகனை நீக்குங்கள். ஆளுநரை திரும்பப் பெற கோரி முதல்வர் சொல்கிறாரே, பஞ்சாப் மாதிரி தமிழகம் ஒரு எல்லை பகுதி மாகாணம். இங்கு எல்லை பகுதி பிரச்சனை வரகூடாது என ஒரு intelligent ஆள் தேவை. அதற்காகத்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். நான் வரும் 28 ஆம் தேதி ஆளுநரை சந்திக்க உள்ளேன். அவரோடு இதுகுறித்து ஆலோசனை நடத்துவோம், இதில் மறைவு என்பது இல்லை, அனைத்தையும் ஆலோசனை செய்வோம். இன்றைய ஆய்வு கூட்டத்தை பொறுத்தவரை, வரும் நவம்பர் 1 முதல் 10 வரை அடிப்படை மற்றும் தீவிர உறுப்பினர் பட்டியல் பதிவேடு தயாரித்து வெளியிடப்படும். நவம்பர் 1-ல் தேர்தல் மேல்முறையீட்டு கமிட்டி அறிவிக்கப்படும்” என்றார்.
What's Your Reaction?