BREAKING : Sitaram Yechury : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!
Sitaram Yechury Passed Away : உடல்நலக்குறைவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று (செப்டம்பர் 12) காலமானார்.

Sitaram Yechury Passed Away : யெச்சூரியின் தந்தை ஆந்திரப் பிரதேச மாநிலத்தின், சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் பொறியியலாளராக இருந்தார். அவரது தாயார் அரசு அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். பள்ளிப்படிப்புக்காக ஹைதராபாத் சென்ற யெச்சூரி 10ஆம் வகுப்பு வரை அங்கு பயின்றார். 1969ஆம் ஆண்டு நடைபெற்ற, மாபெரும் வீரம் செறிந்த தெலுங்கானா போராட்டத்தை தொடர்ந்து, அவர் டெல்லிக்கு சென்றார்.
மேல்நிலைக்காக டெல்லியில் உள்ள பிரசிடெண்ட்ஸ் எஸ்டேட் பள்ளியில் சேர்ந்த யெச்சூரி, மேல்நிலைத் தேர்வில் அகில இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்றார். பின்னர், பி.ஏ. பொருளாதாரத்தை, செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் பயின்ற அவர், 1975 இல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பை பொருளியல் துறையில் பெற்றார்.
இரண்டிலும், முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்ற யெச்சூரி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி. படிப்பில் சேர்ந்தார். ஆனால், இந்திரா காந்தி அரசு கொண்டுவந்த அவசரநிலை பிரகடனத்தின் போது கைது செய்யப்பட்டதால், அதனை அவர் கைவிட்டார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு, அவசரநிலைக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்கு, ஏற்பாடு செய்வதற்காக சில காலம் தலைமறைவாக இருந்தார்.
1974 ஆம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தி்ல் உறுப்பினராக சேர்ந்தார். ஒரு சில வருடங்களுக்குப் பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இல் இணைந்தார். அவசரநிலை காலத்திற்கு பிறகு, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், மாணவர் சங்க தலைவராக ஒரு வருடம் (1977-78) தேர்வு செய்யப்பட்டார். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அசைக்க முடியாத இடதுசாரி கோட்டையை உருவாக்குவதில் யெச்சூரி, பிரகாஷ் காரத்துடன் இணைந்து முக்கிய பங்காற்றினார்.
தொடர்ந்து 1978ஆம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தின் அனைந்திந்திய இணை செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர், அகில இந்தியத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கேரளா மற்றும் கொல்கத்தா அல்லாத இந்திய மாணவர் சங்கத்தின் முதல் தலைவர் யெச்சூர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, 1984ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1985 இல், கட்சியின் அரசியலமைப்பு மாற்றியமைக்கப்பட்டு, பொலிட்பீரோவின் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றுவதற்காக இளைய தலைவர்களாக இருந்த, பிரகாஷ் காரத், சுனில் மொய்த்ரா, பி.ராமச்சந்திரன் மற்றும் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை ஆகியோரைக் கொண்ட ஐந்து பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. அதில், யெச்சூரியும் ஒருவர்.
1992ஆம் ஆண்டு நடைபெற்ற 14ஆவது மாநாட்டில், பொலிட்பீரோ உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2015ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 21ஆவது மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 5ஆவது பொதுச்ச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து 2018ஆம் ஆண்டு மற்றும் 2022ஆம் ஆண்டுகளிலும், யெச்சூரி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
1996இல் ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கான பொதுவான குறைந்தபட்ச திட்டத்தை உருவாக்க, ப. சிதம்பரத்துடன் இணைந்து பணியாற்றினார், மேலும் 2004இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கியபோது கூட்டணிக் கட்டமைப்பை தீவிரமாகத் தொடர்ந்தார்.
மாநிலங்களை உறுப்பினராக மேற்குவங்கத்தில் இருந்து 2005ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். அப்போது, பாராளுமன்றத்தில் பல முக்கியமான பிரச்சினைகளை கவனத்திற்கு கொண்டு வருவதற்கும், முக்கியமான பிரச்சினைகள் குறித்த கேள்விகளை எழுப்புவதற்கும் பெயர் பெற்றவராக திகழ்ந்தார்.
சீதாராம் யெச்சூரி பல குறிப்பிடத்தக்க புத்தகங்களை எழுதியுள்ளார். கார்ப்பரேட்டுகள் மதவெறியர்களின் கள்ளப் பிணைப்பு, மக்கள் நாட்குறிப்பில் விடுதலைப் போராட்டம், மார்க்சியம்: மாற்றத்திற்கான ஒரே சக்தி, இந்தி இந்துத்துவா இந்துராஜ்ஜியம், அரசியலமைப்புச் சட்டத்தை அழித்திட அனுமதியோம், மோடி அரசாங்கம்: வகுப்புவாதத்தின் புதிய அலை போன்ற பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
‘புரட்சியின் துருவ நட்சத்திரம் தோழர் லெனின்’ என்ற புத்தகத்தை பிரகாஷ் காரத் உடன் இணைந்து எழுதியுள்ளார். அவரது நாடாளுமன்ற உரைகள், சீத்தாராம் யெச்சூரி நாடாளுமன்ற உரைகள் என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் பட்ஜெட் குறித்த உரை, ‘கார்ப்பரேட் நல பட்ஜெட்’ என்ற பெயரிலும் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சீதாராம் யெச்சூரி இன்று (செப்டம்பர் 12) காலமானார். அவசர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சீதாராம் யெச்சூரியின் உடல்நிலையை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு செய்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 72. சீதாராம் யெச்சூரியின் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமின்றி இந்திய அரசியலிலும் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?






