மோடி பிரதமர் ஆகும் போது நானும் அந்த நாற்காலிக்கு ஆசைப்படக்கூடாதா?..கேட்கிறார் திருமாவளவன்

நானும் ரவுடிதான் என்று வடிவேல் சொல்கிற மாதிரி... நான்தான் அடுத்த முதல்வர்.. நான்தான் அடுத்த முதல்வர்.. என்று சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நம்முடைய களமும் நம்முடைய செயலும் தான் நம்மை அந்த இடத்துக்கு கொண்டு போய் சேர்க்கும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

Sep 19, 2024 - 17:52
Sep 19, 2024 - 17:53
 0
மோடி பிரதமர் ஆகும் போது நானும் அந்த நாற்காலிக்கு ஆசைப்படக்கூடாதா?..கேட்கிறார் திருமாவளவன்
thol tirumavalavan

யார் யாரோ முதல்வர் பீடத்திற்கு ஆசைப்படுகிறபோது திருமாவளவன் அந்த இடத்திலே அமர்ந்தால் என்ன என்று உழைக்கிற மக்கள் சொல்லட்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.நான் ஏன் துணை முதல்வர் ஆக வேண்டும்? பிரதமர் ஆக ஆசைப்படக்கூடாதா என்றும் திருமாளவன் கூறியுள்ளார்.

சேலத்தில் இன்று மது ஒழிப்பு மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தொல்.திருமாவளவன், இங்கே அனைத்து தரப்பாறும் ஒருங்கிணைந்து சேர வேண்டிய இடத்தில், செயல்பட வேண்டிய இடத்தில், செயல்படுவதற்கான ஒரு அரசியல் முதிர்ச்சி இங்கே குறைபாடாக இருக்கிறது. அது தான் முக்கியம். தேர்தலுக்கு 25ல் 12 மாசம் இருக்குது.. இதுல அக்டோபர், நவம்பர், டிசம்பர் என மூணு மாதம் இருக்குது. 2026ல் நான்கு மாதம் இருக்கிறது.19 மாதம் தேர்தலுக்கான இடைவெளி உள்ளது. ஆனால் முன்னாடியே இப்படி வந்து ஒரு சூட்ட கெளப்பி விடுதலைச் சிறுத்தைகளை அந்த கூட்டணியில் இருந்து வெளியேத்திட்டு எங்க அஜெண்டா முடிஞ்சுது; திருமாவளவன் நடுத்தெருவுக்கு வந்துட்டாரு.. என கணக்குப் போட்டார்கள். அவ்வளவுதான்.

தோழர்களே நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மிக கவனமாக இருக்க வேண்டும். நான் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்ததில் எந்த தவறும் இல்லை. ஏனென்றால் எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. அந்த பொலிட்டிக்கல் மெச்சூரிட்டி இருப்பதினால்தான் அந்த வார்த்தை வருகிறது. உள்நோக்கம் கிடையாது. எல்லாரும் சேர்ந்து நாம் செயல்பட்டால் என்ன தப்பு? மது ஒழிப்புக்காக தானே அழைக்கிறோம்? அந்த பேட்டியில் அடுத்த அடுத்த வார்த்தையை என்ன சொல்றேன்னா இதை எலெக்ஷன் ஓட முடிச்சு போடாதீங்க தேர்தல் நிலைப்பாடு வேறு - மது ஒழிப்புக்கான களம் வேறு என்பதுதானே. 

ஜனங்களோட நீ ரொம்ப நெருக்கமா இருந்து அவங்க குரலை, உணர்வை பிரதிபலிக்கிறேன் என சொன்னால் ஒருபோதும் மக்கள் நம்மை கைவிட்டு விடமாட்டார்கள். ஆனால் நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான் என்று வடிவேல் சொல்கிற மாதிரி... நான்தான் அடுத்த முதல்வர்.. நான்தான் அடுத்த முதல்வர்.. என்று சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நம்முடைய களமும் நம்முடைய செயலும் தான் நம்மை அந்த இடத்துக்கு கொண்டு போய் சேர்க்கும்.

ஒரு கட்டத்தில் பொது மக்களே பேசுவாங்க.. ஏன் திருமாவளவன் வரக்கூடாதா என்று மக்கள் பேசுவார்கள். யார் யாரோ அந்த பீடத்திற்கு ஆசைப்படுகிறபோது திருமாவளவன் அந்த இடத்திலே அமர்ந்தால் என்ன என்று உழைக்கிற மக்கள் சொல்லட்டும். வாக்காளர்கள் சொல்லட்டும்.

விசிகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன் தான் இந்த குழப்பங்களுக்கெல்லாம் காரணம்; திருமாவளவனை அவர்தான் இயக்கி கொண்டு இருக்கிறார்; அவர்தான் இயக்குநர் என்கிறார்கள். திருமாவளவன் ஹீரோவா நடிச்சு அந்த படத்தை இயக்குற அளவுக்கு இன்னும் யாருக்கும் இங்கே தகுதி இல்லை. அப்படி தான் நான் சொல்லுவேன். என்னை இயக்குவதற்கான இயக்குநர்கள் இங்கே யாரும் இல்லை.

மோடி பிரதமர் ஆகும் போது நான் பிரதமர் ஆக முடியாதா? என் இலக்கு வேற… ஏன் துணை முதல்வர் பதவி, நான் பிரதமர் ஆகக்கூடாதா என்றும் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow