சென்னை: கடந்த மாதம் தங்கலான், டிமாண்டி காலனி 2, வாழை, கொட்டுக்காளி போன்ற திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. இந்த மாதம் 5ம் தேதி விஜய்யின் கோட் வெளியானதால், சின்ன பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இந்த வாரம் தமிழில் மொத்தம் 6 படங்கள் வெளியாகின்றன. இதில் 4 படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு காணப்படுகிறது. இதில் லப்பர் பந்து படத்துக்கு பத்திரிகையாளர்களுக்கான திரையிடலில் பாசிட்டிவான விமர்சனம் கிடைத்துள்ளது.
ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லப்பர் பந்து படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ளார். கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக வைத்து காமெடி ப்ளஸ் எமோஷனல் மூவியாக உருவாகியுள்ளது லப்பர் பந்து. அட்டகத்தி தினேஷ் மாமனராகவும், ஹரிஷ் கல்யாண் மருமகனாகவும் நடித்துள்ளனர். லப்பர் பந்து ட்ரைலர் வெளியான போதே படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில், தற்போது சினிமா செய்தியாளர்களுக்கு திரையிடப்பட்ட லப்பர் பந்து படத்துக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் பார்க்கிங் வரிசையில், லப்பர் பந்து படமும் ஹரிஷ் கல்யாணுக்கு ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து சீனு ராமசாமி இயக்கியுள்ள கோழிப்பண்ணை செல்லத்துரை படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. யதார்த்தமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீனு ராமசாமி. மாமனிதனுக்குப் பின்னர் அவர் இயக்கியுள்ள கோழிப்பண்ணை செல்லத்துரை, அண்ணன் – தங்கை இடையேயான உறவை பேசும் படமாக உருவாகியுள்ளது. யோகி பாபு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ள இந்தப் படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டியிருந்தனர். இதனால் இந்த வார ரிலீஸில் கோழிப்பண்ணை செல்லத்துரையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சசிகுமார் நடித்துள்ள நந்தன் படமும் இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. ரா சரவணன் இயக்கியுள்ள நந்தன் படத்தில் சசிகுமார் ரொம்பவே வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார். சூரிக்காக எழுதிய கதையில் சசிகுமார் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் ஆகியோரும் நந்தன் படத்தில் நடித்துள்ளனர். சாதிய அரசியலை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள நந்தன் படமும் இந்த வாரம் தியேட்டர் ரிலீஸில் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
அதேபோல், ஹிப் ஹாப் ஆதியின் கடைசி உலகப் போர் திரைப்படமும் இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. போரை பின்னணியாக வைத்து ஃபேண்டஸியான மூவியாக உருவாகியுள்ள கடைசி உலகப் போர் படத்தை, ஹிப் ஹாப் ஆதியே இயக்கி தயாரித்துள்ளார். இதுவரை ஹிப் ஹாப் ஆதியின் படங்கள் எதுவும் எதிர்பார்த்தளவில் ஹிட்டாகவில்லை. இதனால் கடைசி உலகப் போர் படத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளார் ஹிப் ஹாப் ஆதி.
சத்யராஜ் நடித்துள்ள தோழர் சேகுவரா திரைப்படமும் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. அலெக்ஷ் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் மொட்டை ராஜேந்தர், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த வரிசையில் தோனிமா என்ற படமும் இந்த வாரம் ரிலீஸாகிறது. காளி வெங்கட் லீடிங் கேரக்டரில் நடித்துள்ள தோனிமா, இந்த வார ரிலீஸில் தாக்குப்பிடிக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.