முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஃப்கானிஸ்தான்.. படுதோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Sep 19, 2024 - 14:07
Sep 19, 2024 - 14:09
 0
முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஃப்கானிஸ்தான்.. படுதோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்கா
ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஒரு காலத்தில் பார்த்தாலே பயத்தை ஏற்படுத்திய தென் ஆப்பிரிக்கா அணி, முக்கியமான போட்டிகளில் மட்டும் தோல்வியை தழுவி, ஜோக்கர்ஸ் என பெயர் பெற்றது. ஆனால், தற்போது, சிறிய அணிகளிடம் கூட இதுவரை வாங்காத அடியை எல்லாம் வாங்கிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட, டி20 தொடரில் 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவி இருந்தது. இந்நிலையில், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் படு மோசமாக தோல்வியை தழுவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென் ஆப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. ஷார்ஜாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதல் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.

ஆஃப்கானிஸ்தான் அணியின் அட்டகாசமான பந்துவீச்சை தக்குப்பிடிக்க முடியாமல், ரீஷா ஹெண்ட்ரிக்ஸ் (9), எய்டன் மார்க்ரம் (2),  டோனி டி ஷோரி (11), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (0), ஜேசன் ஸ்மித் (0), கெய்ல் வெர்ரெய்னே (10), ஆண்டிலே பெஹ்லுக்வாயோ (0) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது தென் ஆப்பிரிக்கா அணி.

இதனால், 36 ரன்களுக்குள்ளேயே 7 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்கா அணி தத்தளித்து. இதனையடுத்து 7ஆவது விக்கெட்டுக்கு களம் புகுந்த வியான் முல்டர் மற்றும் ப்ஜோர்ன் ஃபார்சுன் ஜோடி அணியை கரை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டது. நிதானமாக ஆடிய வியான் முல்டர் 80 பந்துகளில் அரைசதம் கடந்து, 52 ரன்களில் வெளியேறினார்.

ப்ஜோர்ன் ஃபார்சுன் 16 ரன்களை எடுத்து வெளியேறினார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 33.3 ஓவர்களில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அற்புதமாக பந்துவீசிய ஆஃப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ஃபஷல்லாஹ் ஃபரூக்கி டாப் 3 பேட்ஸ்மேன்களை வெளியேற்றியதோடு, 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மொஹமது கஷன்ஃபர் 3 விக்கெட்டுகளையும், ரஷீத் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி, 26 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குல்பதின் நைப் 34 ரன்களும், அஷ்மதுல்லா ஒமர்ஷாய் 25 ரன்களும், ரியாஸ் கான் மற்றும் ஹஸ்மதுல்லாஹ் ஷஹிடி தலா 16 ரன்களும் எடுத்தனர்.

இதன் மூலம், ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஃப்கானிஸ்தான். மேலும், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் நாடுகளில் அதிகப்பந்துகளை மீதம் வைத்து வெற்றிபெற்ற அணிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த போட்டியில் இரு அணிகளையும் சேர்ந்து 213 ரன்கள் எடுக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் இதுவே குறைந்தபட்ச ஸ்கோராக அமைந்தது. இந்திய அணியை தவிர, மற்ற அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் ஆஃப்கானிஸ்தான் வெற்றிக் கனியை பறித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில், 83 ரன்களுக்குள் தென் ஆப்பிரிக்கா அணி சுருண்டது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow