வங்கதேச பவுலர்களுக்கு தண்ணி காட்டிய GOATஅஸ்வின்.. அதிரடி சதத்திற்கு பிறகு சொன்னது இதுதான்!
அதிரடியாக விளையாடிய அஸ்வின் சொந்த ஊர் மக்கள் முன்னிலையில் டெஸ்ட்டில் 6வது சதம் (102 ரன்) அடித்து சாதனை படைத்தார். மொத்தம் 10 பவுண்டரிகள் ஓடவிட்ட அவர் 2 சிக்சர்களையும் விளாசினார்

சென்னை: வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. வழக்கமாக ஸ்பின்னுக்கு சாதகமாக இருக்கும் சென்னை பிட்ச், இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் பாஸ்ட் பவுலர்களுக்கு ஒத்துழைத்தது.
இதை பயன்படுத்தி வங்கதேச வீரர் ஹசன் மஹ்மூத் மிரட்ட, நட்சத்திர வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா (6 ரன்), சுப்மன் கில் (0), விராட் கோலி (6 ரன்), கே.எல்.ராகுல் (16 ரன்) என சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். மறுபக்கம் ஜெய்ஸ்வால் அரை சதம் அடித்தாலும், ஒரு கட்டத்தில் இந்திய அணி 144/6 என பரிதவித்தது. இதன்பிறகு தமிழ்நாட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திரே ஜடேஜா பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய ஜடேஜா அரைசதம் அடித்தார்.
மறுபக்கம் அதிரடியாக விளையாடிய அஸ்வின் சொந்த ஊர் மக்கள் முன்னிலையில் டெஸ்ட்டில் 6வது சதம் (102 ரன்) அடித்து சாதனை படைத்தார். மொத்தம் 10 பவுண்டரிகள் ஓடவிட்ட அவர் 2 சிக்சர்களையும் விளாசினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழந்து 339 ரன்கள் குவித்தது. ஜடேஜா(82 ரன்), அஸ்வின் (102 ரன்) களத்தில் உள்ளனர்.
சூப்பர் சதம் விளாசி இந்திய அணியை தலைநிமிர வைத்த அஸ்வினுக்கு ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். சென்னை மண்ணில் சதம் விளாசியது குறித்து முதல் நாள் ஆட்டம் முடிந்ததும் அஸ்வின் நெகிழ்ச்சியுடன் பேசினார். அப்போது அவர், ’’சொந்த மண்ணில் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது எப்போதுமே சிறப்பு வாய்ந்தது. இந்த மைதானத்தை நான் முழுமையாக நேசிக்கிறேன். கடந்த முறை நான் இங்கு சதம் விளாசினேன்.
அது எனக்கு டி20 தொடருக்கு மீண்டும் வர உதவியது. நல்ல பவுன்ஸ் கொண்ட இந்த பிட்ச்சில் ரிஷப் பண்ட் போன்று அடித்து விளையாடுவது கடினமானது. நான் அனுபவித்து விளையாடினேன். ஜடேஜா சிறந்த பேட்டர்களில் ஒருவர். நான் அதிக வியர்வை வெளியேறி அதிக சோர்வுடன் இருந்தபோது, எவர் எனக்கு மிகவும் உதவி செய்தார். நாம் இரண்டு, மூன்று ரன்கள் எடுக்க வேண்டாம் என்று அவர் கூறியது உதவியாக இருந்தது. நாளையும் புதிய பந்தை சமாளிக்க கொஞ்சம் சவாலாக இருக்கும்’’என்று தெரிவித்தார்.
What's Your Reaction?






