ஷஃபாலி வர்மா அதிரடி.. நேபாளத்தை பந்தாடிய இந்திய அணி.. அரையிறுதிக்கு தகுதி!
42 பந்துகளில் 47 ரன்கள் அடித்த டிலான் ஹேமலதா மகர் பந்தில் கேட்ச் ஆனார். தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய ஷஃபாலி வர்மா 48 பந்தில் 81 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதில் 12 பெளண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும்.

கொழும்பு: 9வது மகளிர் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. டி20 முறையில் நடக்கும் இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு எமீரகம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்கதேசம், மலேசியா, தாய்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், 10வது லீக் போட்டியில் இந்தியா மகளிர் அணியும், நேபாள மகளிர் அணியும் இன்று விளையாடின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியில் வெளுத்துக் கட்டியது. தொடக்க வீராங்கனைகள் ஷஃபாலி வர்மா, டிலான் ஹேமலதா ஆகியோர் நேபாள வீராங்கனைகளின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.
ஷஃபாலி வர்மா தனக்கே உரித்தான ஸ்டைலிஷ் அடித்து பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்டினார். 13.6 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 122 ரன்னாக உயர்ந்தபோது இந்த சத கூட்டணி பிரிந்தது. 42 பந்துகளில் 47 ரன்கள் அடித்த டிலான் ஹேமலதா மகர் பந்தில் கேட்ச் ஆனார். தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய ஷஃபாலி வர்மா 48 பந்தில் 81 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதில் 12 பெளண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும்.
அடுத்து களமிறங்கிய சஜீவன் சஜனா 10 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். ஆனால் கடைசி கட்டத்தில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியில் மிரட்டியதால் இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 178 ரன்கள் குவித்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15 பந்தில் 28 ரன்களுடன் களத்தில் இருந்தார். நேபாளம் தரப்பில் சீதா ராணா மகர் 2 விக்கெட்டுகளும், கபிதா ஜோஷி 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்பு சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய நேபாளம் அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது. அந்த அணியின் சம்ஜானா கட்கா (7 ரன்), சீதா ராணா மகர் (18 ரன்), கபிதா குன்வர்(6), கேப்டன் இந்து பர்மா (14) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். தொடந்து கபிதா ஜோஷி (0), பூஜா மஹதோ (2) என அனைவரும் தங்களது விக்கெட்டை எளிதாக தாரைவார்த்தனர்.
இந்த சரிவில் இருந்து மீள முடியாத நேபாளம் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்து 82 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளும், அருந்ததி ரெட்டி, ராதா யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினார்கள். அதிரடி அரைசதம் விளாசிய ஷஃபாலி வர்மா ஆட்டநாயகி விருது வென்றார்.
What's Your Reaction?






