PV Sindhu : இந்தியர்களின் மனதை நொறுக்கிய பி.வி.சிந்து.. அதிர்ச்சி தோல்வி.. ஒலிம்பிக்கில் இருந்து வெளியேற்றம்!
PV Sindhu at Paris Olympics 2024 : பேட்மிண்டன் போட்டியில் கடந்த 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கமும், 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கமும் வென்றிருந்த பி.வி.சிந்து, இந்த முறை ஹாட்ரிக் பதக்கம் வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே பி.வி.சிந்து பரிசளித்துள்ளார்.
PV Sindhu at Paris Olympics 2024 : உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 'பாரீஸ் ஒலிம்பிக் 2024' போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கோலாகலமாக நடந்து வருகின்றன. ஜூலை 26ம் தேதி முதல் தொடங்கிய இந்த போட்டிகள் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளன. மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
இந்தியாவில் இருந்து மொத்தம் 117 வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டைக்காக களமிறங்கி விளையாடி வருகின்றனர். பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை எந்த தங்கத்தையும் அறுவடை செய்யாமல் 3 வெண்கலம் வென்றுள்ளது. துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் முதல் 2 வெண்கல பதக்கத்தையும் தாய்நாட்டுக்காக வென்று கொடுத்தார்.
நேற்று இந்தியாவுக்கு 3வது பதக்கம் கிடைத்தது. அதாவது 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் துப்பாக்கி சுடும் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார். முன்னதாக, இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, பெண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியின் எஸ்டோனியாவை சேர்ந்த கிறிஸ்டின் குபாவை (Kristin Kuuba) 21-5, 21-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.
இந்நிலையில், பி.வி.சிந்து ரவுண்ட் ஆப் 16 சுற்றில் சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவோவை (He Bing Jiao) நேருக்கு நேர் சந்தித்தார். தொடக்கம் முதலே தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் பி.வி.சிந்துவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஹி பிங் ஜியாவோ, 21-19, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றிக் கனியை பறித்தார். இந்த அதிர்ச்சி தோல்வியின் மூலம் பி.வி.சிந்து, பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.
பேட்மிண்டன் போட்டியில் கடந்த 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கமும், 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கமும் வென்றிருந்த பி.வி.சிந்து, இந்த முறை ஹாட்ரிக் பதக்கம் வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே பி.வி.சிந்து பரிசளித்துள்ளார்.
இந்த தோல்விக்கு பிறகு மனம் உடைந்து பேசிய பி.வி.சிந்து, ''ஒலிம்பிக் போட்டிகளில் அனைத்து வீரர்களும் வெற்றி பெறவே விரும்புவார்கள். ஆனால் நான் விரும்பிய ரிசல்ட் எனக்கு கிடைக்கவில்லை. என்னால் வெற்றியை நெருங்க முடியவில்லை. அதே வேளையில் ஹி பிங் ஜியாவோ மிகவும் சிறந்த வீரர். இருவரும் கடந்த காலங்களில் பலமுறை விளையாடி இருக்கிறோம். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்'' என்று கூறியுள்ளார்.
முன்னதாக, பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக 3வது பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலே, மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் கம்பல்வாடி கிராமத்தை சேர்ந்தவர். இதனால் நாட்டுக்கு பெருமை சேர்த்த அவருக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். ஸ்வப்னில் குசாலே, இந்திய ரயில்வேயில் புனேவில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். தற்போது வெண்கல பதக்கம் வென்றதால் அவர் மத்திய ரயில்வேயின் விளையாட்டு பிரிவில் சிறப்பு அதிகாரியாக பணி உயர்வு பெற்றுள்ளார்.
What's Your Reaction?