Swapnil Kusale Won Bronze Medal in Shooting at Paris Olympics 2024 : உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 'பாரீஸ் ஒலிம்பிக் 2024' போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கோலாகலமாக நடந்து வருகின்றன. கடந்த ஜூலை 26ம் தேதி முதல் தொடங்கிய இந்த போட்டிகள் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளன. மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
இந்தியாவில் இருந்து மொத்தம் 117 வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை இதுவரை 2 வெண்கலம் வென்றுள்ளது. இந்த 2 வெண்கல பதக்கத்தையும் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வென்று புதிய சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் தொடரில் இந்தியாவுக்கு 3வது பதக்கம் இன்று கிடைத்துள்ளது.
அதாவது 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் துப்பாக்கி சுடும் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இலக்கை நோக்கி துல்லியமாக சுட்ட ஸ்வப்னில் குசாலே, 451. 4 புள்ளிகள் பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளார். இந்த போட்டியில் சீன வீரர் ஒய்.கே. லூ 463.6 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்து தங்க பதக்கத்தை தட்டித் தூக்கியுள்ளார். உக்ரைன் வீரர் குலீஷ் 461 புள்ளிகள் பெற்று 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.
ஸ்வப்னில் குசாலே வென்ற பதக்கத்தையும் சேர்த்து இந்தியா இதுவரை 3 பதக்கங்களை வென்றுள்ளது. நாட்டுக்காக 3வது பதக்கத்தை வென்றுள்ள 28 வயதான ஸ்வப்னில் குசாலே மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் கம்பல்வாடி கிராமத்தை சேர்ந்தவர். இவர் இந்திய ரயில்வேயில் புனேவில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார்.
இதில் வரும் வருமானத்தை வைத்தே ஸ்வப்னில் குசாலே தனது முதல் ரீபைள் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. 2015ம் ஆண்டு குவைத்தில் நடந்த ஆசிய சூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 50மீ ரிபைள் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது முதல் அறிமுக ஒலிம்பிக் போட்டியிலேயே சாதனை படைத்துள்ளார். இந்த பிரிவில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்று கொடுத்த பெருமையையும் ஸ்வப்னில் குசாலேவை சென்றடைந்துள்ளது.
ஒலிம்பிக்கில் 3வது பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஸ்வப்னில் குசாலேவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியும் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ''பாரீஸ் ஒலிம்பிக்கில் 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தனது திறமை, சிறந்த செயல்திறன் மூலம் ஒவ்வொரு இந்தியரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளார்'' என்று கூறியுள்ளார்.