ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் - ஆஸ்திரேலியா அபார வெற்றி
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான 3ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஸ்காட்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அந்த போட்டியில், அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் 25 பந்துகளில் 80 ரன்கள் குவித்து சாதனைப் படைத்திருந்தார்.
இதனையடுத்து, எடின்பர்க் மைதானத்தில் வெள்ளிக்கிழமை அன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது.
கடந்த போட்டியில் அதிரடியாக ஆடி சாதனை படைத்த டிராவிஸ் ஹெட் டக்-அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் 16 ரன்களில் வெளியேறியதால், 23 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாத விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்க்லிஸ் 20 பந்துகளில் அரைசதம் கண்டார்.
அவரின் அதிரடியால் ஆஸ்திரேலியா 10 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. இதனையடுத்து, கேமரூன் கிரீன் 36 ரன்களிலும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 20 ரன்களிலும் வெளியேறினர். ஆனாலும், தொடர்ந்து ஸ்காட்லாந்து பந்துவீச்சை நொறுக்கிய ஜோஷ் இங்க்லிஸ் 43 பந்துகளில் சதம் கண்டார். இதன் மூலம் குறைந்த பந்துகளில் சதமடித்த, தனது முந்தைய சாதனையை சமன் செய்தார்.
முன்னதாக, குறைந்த பந்துகளில் (43), சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஆரோன் பிஞ்ச், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரும் இருந்தனர். இதனையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியில், பிரண்டன் மெக்கல்லம் (59), ஜார்ஜ் முன்சி (19) தவிர மற்ற யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை.
இதனால், ஸ்காட்லாந்து அணி 126 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 3.4 ஓவர்கள் வீசி, 23 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை வகிக்கிறது.
What's Your Reaction?