அசாமிப் பெண்ணின் நட்புக் கோரிக்கை - தீரா உலா -6

இந்திய நெடும்பயணத்தின் குறிப்புகளாலான இத்தொடரின் இந்த அத்தியாயம் அசாம் மாநிலம் தேஸ்பூரில் உலவிய அனுபவத்தைக் கூறுகிறது.

Sep 8, 2024 - 19:26
Sep 14, 2024 - 16:23
 0
அசாமிப் பெண்ணின் நட்புக் கோரிக்கை - தீரா உலா -6
theera ula 6

தேஸ்பூரில் உள்ள தர்ரங் கலை அறிவியல் கல்லூரி அசாமின் புகழ்பெற்ற கல்லூரிகளில் ஒன்றென அபினவ் சற்றுப் பெருமை மேலோங்கக் கூறினான். அக்கல்லூரியின் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மைத் துறைக்கு என்னைக் கூட்டிச் சென்றான். இத்துறையின் உதவிப் பேராசிரியராக இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அவன் பணியில் இணைந்திருக்கிறான். இதற்கு முந்தைய ஆண்டு அவனை முதல் முதலாக சந்தித்த போது ட்ராவல் ஏஜென்சி தொடங்கி நடத்தும் திட்டத்தோடு இருந்தான். குறைந்த விலையில் டூர் பேக்கேஜ்கள் கொடுக்க வேண்டும், என்னைப் போன்ற தனிப்பயணிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி அமைக்க வேண்டும் என பெரும் திட்டம் அவனுக்குள் இருந்தது. அவன் இக்கல்லூரியில் உதவிப் பேராசிரியராக இணைந்ததில் பேருவகை கொண்டாலும், என்றாயினும் அவன் அத்திட்டங்களை செயல்படுத்துவான் என்கிற எனது நம்பிக்கையை அவனிடத்தில் தெரிவித்தேன். 

எனது முந்தைய பயண நூலான ‘Back பேக்’ நூலை இத்துறைக்கான நூலகத்தில் வைத்திருப்பதாகச் சொன்னான். நெகிழ்ச்சியாக இருந்தது. சுற்றுலா மற்றும் பயண மேலாண்மைத் துறையில் சக உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிற ரூஹியிடம் என்னை அறிமுகப்படுத்தினான். ரூஹிக்கும் அபினவின் வயதுதான் இருக்கும். பார்த்ததும் சட்டென ஈர்ப்பது அவளது தெற்றுப்பல்தான். அவள் பேசுகையிலும், சற்றே உதடு விரியப் புன்னகைக்கையிலும் அத்தெற்றுப்பல் துருத்திக் கொண்டு நின்றபடி அவளுக்கு வசீகரத்தைக் கொடுத்தபடி இருந்தது.        

 

ரூஹி என்னிடம் "நீங்கள் மேற்கொண்ட பயண அனுபவங்கள் குறித்து எங்கள் மாணவர்கள் மத்தியில் உங்களைப் பேச வைக்கலாம் என நினைத்தோம்... ஆனால் அவர்களுக்கு ஆங்கிலம் அவ்வளவாகப் புரியாது என்பதால் அத்திட்டத்தை கை விட்டு விட்டோம்" என்றாள். என்னைப் பேச வைக்க முனைந்தமைக்கு மனதுக்குள் நன்றி சொன்னேன். நான் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவேன் என நம்பிய ரூஹிதான் எவ்வளவு மேன்மையானவள். மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தும் அளவுக்கெல்லாம் ஆங்கில அறிவு இல்லையென்கிற நெஞ்சில் அறையும் உண்மையைக் கூறி ஏன் அவளது நம்பிக்கையைச் சிதைக்க வேண்டும் எனத் தோன்றியதும் புன்னகைத்தபடி அவளது சொற்களைக் கடந்தேன். 

கல்லூரி வளாகத்துக்கு எதிரே உள்ள தேநீர் விடுதியில் இளஞ்சூட்டில் தேநீர் அருந்தியபடியே பேசினோம். நான் தென்னிந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன் என்றதும் ரூஹி தனக்கு இட்லியும் சாம்பாரும் சமைக்கத் தெரியும் என்றாள். நீங்கள் தேஸ்பூரில் இருந்து கிளம்புவதற்குள் இட்லி, சாம்பார் சமைத்துத் தருகிறேன் என்றாள். அதனை எப்படி மறுக்க முடியும்? தயவு செய்து சமைத்துத் தரும்படி கேட்டேன். சாம்பாருடன் இட்லி சாப்பிடுவதற்கான ஆவல் நிச்சயமாக வட இந்தியாவின் எந்த இடுக்கிலும் எழும். தென்னக உணவுகளின் மீதான தேடலே நமக்கு அங்குதான் உருவாகும்.     

தேநீர் அருந்தியபடியே அபினவ் "நீங்கள் எடுத்திருப்பது துணிச்சலான முடிவு... கடுமையான சூழல்கள் வந்தாலும் கைவிடாமல் தொடருங்கள்" என்று எனது இந்நெடும்பயணம் குறித்துச் சொன்னான். நிலம், மொழி கடந்து எனக்கும் அவனுக்குமான ஒரு பிணைப்பை உண்டாக்கியிருப்பது பயணத்தின் மீதான எங்களது பற்றுதல்தான். அந்தப் பிணைப்பின் காரணமாகத்தான் அபினவ் வீட்டு மாடியில் நான் ஒரு விருந்தினராக 3 நாள்கள் தங்கியிருந்தேன். காலை வேளையில் அபினவ் கல்லூரி சென்று விட்டு, மாலை என்னை அழைத்துக் கொண்டு வெளியே செல்வான். பகல் முழுக்க கட்டுரை எழுதும் பணியில் ஈடுபட்டேன். அப்போது அபினவின் அப்பாதான் எனக்கு மதிய உணவைத் தட்டிலிட்டு மாடிக்குக் கொண்டு வந்து கொடுப்பார். அவர் அசாம் வருவாய்த் துறையில் கோட்டாட்சியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விருந்தோம்பல் என்றாலும் எனக்காக அவர் ஒவ்வொரு முறை மாடி ஏறி வருவது எனக்கு சற்று சங்கடமாகத்தான் இருந்தது.    


 தேஸ்பூர் நகரை ஒட்டியே சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவு அகன்று பாய்கிறது பிரம்மபுத்திரா. கனவைப் போல விரியும் பெருநதி. மாலை வேளையில் அபினவ் மற்றும் அவனது நண்பரான கஸ்தவ் தாஸுடன் நகருலா சென்றேன். இருள் கவிந்த பிற்பாடு பிரம்மபுத்திரா நதியைக் கடக்கிற பாலத்தில் மின் விளக்குகளின் ஒளி சுடர் விட்டுக் கொண்டிருந்தது. அந்த ஒளியின் பிரதிபலிப்பு எத்தனை தொலைவு அகன்றிருக்கிறதோ அவ்வளவுதான் பிரம்மபுத்திராவின் அப்போதைய நீரோட்டம். பிரம்மபுத்திரா நதிக்கு முன் கங்கையே ஒரு குழந்தைதான் என்கையில் பாதியளவு பாய்கிற நீரோட்டத்தைக் குறைவானது என மதிப்பிட முடியாதுதான். இரு கரையைத் தழுவிச் செல்லும் அளவுக்கு நீர் வரத்தில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். 

பொதுவான தலைப்புகளில் உரையாடியபடியே நதிக்கரையில் உலவிக் கொண்டிருந்தோம். மாலை நேர நடைபயிற்சி செய்கிற தேஸ்பூர் முகங்களைச் சந்தித்தவாறே சென்றோம். கஸ்தவ் தாஸ் காரில் எங்களை ஏற்றிக் கொண்டு தேஸ்பூர் நகரைத் தாண்டிச் சென்றார். எங்கு செல்கிறார் என்று தெரியவில்லை. நான் கேட்கவுமில்லை. புறநகரில் ஒரு பஜ்ஜிக்கடைக்குக் கூட்டிச் சென்றனர். பொதுவாகவே வட இந்தியாவில் மாலை நேர சிற்றுண்டிகளில் பானி பூரியும், பாவு பாஜியும்தான் பெரும் செல்வாக்கு கொண்டது.  நான் தென்னிந்தியன் என்பதால் என்னை பஜ்ஜிக் கடைக்குக் கூட்டி வந்தனர். சூடான வெங்காய பஜ்ஜியைத் தட்டிலிட்டு, தேங்காய்ச் சட்னியோடு கொடுத்தனர். என்ன முயன்றாலும் அவர்களால் நம்மூர் சட்னியை ஈடு செய்ய முடிவதில்லை. பஜ்ஜியை ஊதி ஊதி உள்ளே தள்ளிக் கொண்டிருக்கையில்தான் பாமுனி மலையைப் பற்றின பேச்சு வந்தது. 

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை கல்லூரி விடுமுறை என்பதால் தேஸ்பூரில் உள்ள வரலாற்றுச் செழுமைமிக்க பாமுனி மலைக்கு என்னைக் கூட்டிச் செல்வதாக அபினவ் சொன்னான். அப்போது  எனது முகநூல் கணக்குக்கு ஓர் அசாமிப் பெண்ணிடம் இருந்து நட்புக் கோரிக்கை வந்திருந்தது. அவளது சுய விவரத்தில் பார்க்கையில் அபினவ் அவளது நட்புப் பட்டியலில் இருந்தான். அன்று காலையில்தான் அபினவ் மற்றும் ரூஹியுடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தேன். அதைப் பார்த்துதான் அவள் எனக்கு நட்பு அழைப்பு விடுத்திருக்க வேண்டும். அவளது அழைப்பை நான் ஏற்றுக் கொண்ட கொஞ்ச நேரத்தில் “பாமுனி மலைக்குச் சென்று வாருங்கள் நல்ல அனுபவமாக இருக்கும்” என்று அவளிடமிருந்து செய்தி வந்தது. அபினவுடன் போகவிருக்கிறேன் என்கிற தகவலை மட்டும் சொன்னேன். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை சொன்னதைப் போலவே அபினவ் என்னை பாமுனி மலைக்குக் கூட்டிச் சென்றான். 

இடிபாடுகளால் நிறைந்திருந்த அம்மலையில் எங்கள் இருவரைத் தவிர யாரும் இல்லை. விஷ்ணு கோவில் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாகி அதன் சிதிலங்கள் மலையைச் சுற்றி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இக்கோவில் குறித்த முழுமையான வரலாறு அறியப்படவில்லை. 9- 10ம் நூற்றாண்டுகளில் இக்கோவில் இருந்திருக்கிறது. 10 - 12ம் நூற்றாண்டில்தான் இக்கோவில் இடிந்திருக்கக் கூடும் எனச் சொல்லப்படுகிறது. சிதிலங்களில் எல்லாம் கலையமைதி கூடிய சிற்பங்கள். இந்தக் கோவிலின் அமைப்பு பஞ்சயாத்னா என்று சொல்லப்படுகிறது. நடுவே விஷ்ணு கோவிலைச் சுற்றிலும் நான்கு சிவன் கோவில்கள் அமைக்கப்பட்டிருந்திருக்கின்றன. அப்படியென்றால் இம்மலையில் சிதிலங்களாகிக் கிடப்பது மொத்தம் ஐந்து கோவில்கள். சிதிலங்களில் தசாவதார சிற்பங்களைப் பார்க்க முடிந்தது. உக்கிர நரசிம்மர், ராமர் சிற்பங்களைக் காண நேர்ந்தது. விடுமுறை தினத்துக்கே உரித்தான நிசப்தம் நிறைந்திருந்தது. வெய்யோனின் உக்கிரம் பெரிதாகத் தீண்டப்படாத நண்பகலில் மலையைச் சுற்றி உலவினோம்.  

சிதிலங்களின் மேல் அமர்ந்து நாங்கள் இளைப்பாறினோம். ‘கிருஷ்ணரின் மருமகனான அனிருத்தன், ஆயிரம் கைகள் கொண்ட சாகவரம் பெற்ற பாணாசுரனின் மகளை காதலிக்கிறான், அதனை ஏற்க மறுத்த பாணாசுரனோ அனிருத்தனை இந்த பாமுனி மலையில்தான் சிறை வைக்கிறான்’ என பாமுனி மலைக்குப்  பின்னுள்ள புராணக்கதையை அபினவ் சொன்னான். அவன் உதிர்க்கும் ஆங்கிலத்திலிருந்து நான் எடுத்துக் கொள்ளும் வார்த்தைகள் சற்றுக் குறைவாகவே இருக்கும் என்றாலும் அதன் சாரத்தை முழுமையாக உள்வாங்கி விடுவேன். இப்படித்தான் அரைகுறை ஆங்கிலத்தைக் கொண்டு இந்தி தெரியாமல் அந்த வட இந்தியத் தோழனுடன் நட்பு கொண்டாடினேன். 

உலவித்திரிவோம்...

கி.ச.திலீபன் 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow