என்னை மறந்து விட்டார்கள்; கேப்டனாக நியமித்தது நான்தான் - கங்குலி வேதனை

அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலி தான், விராட் கோலியின் கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன.

Jul 15, 2024 - 01:41
Jul 15, 2024 - 16:08
 0
என்னை மறந்து விட்டார்கள்; கேப்டனாக நியமித்தது நான்தான் - கங்குலி வேதனை
சவுரவ் கங்குலி

ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்தது நான்தான் என்பதை எல்லோரும் மறந்து விட்டார்கள் என்று முன்னாள் இந்திய கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி வேதனை தெரிவித்துள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை 2024  இறுதிப்போட்டியில் இந்திய அணியும் தென் ஆப்பிரிக்கா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது. 2007ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்ற நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு ரோஹித் சர்மா தலைமையிலான படை சாதித்து காட்டியுள்ளது.

இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. பின்பு 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 169 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. 

இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டு, அணியை வழி நடத்தியதோடு, அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் (257 ரன்கள்) பிடித்தார். கோப்பையை வென்றதும் ரோஹித் சர்மா மைதானத்திலேயே படுத்துக் கிடந்ததும், மைதானத்தில் இருந்த புற்களை தின்றதும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு உணர்ச்சிப் பூர்வமாக அமைந்தது.

இந்நிலையில், ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்தது தான் என்பதை எல்லோரும் மறந்து விட்டார்கள் என்று வேதனை தெரிவித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்தது. இதையடுத்து அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி தனது பொறுப்பை ராஜினாமா செய்தார்.

அதனை தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ரோஹித் சர்மாவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அடுத்தடுத்து சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில் 2022 ஆம் ஆண்டு டெஸ்ட் அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விராட் கோலி விலகினார்.

கேப்டன் பொறுப்பு மாற்றப்பட்ட நிகழ்வு, கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தை கிளப்பியது. அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலி தான், விராட் கோலியின் கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன.

கேப்டன் பதவி பறிப்புப் பற்றி பேசியிருந்த விராட் கோலி, இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து முன்னறிவிப்பின்றி நீக்கிவிட்டார்கள் என்றும் நீக்குவதற்கு சுமார் ஒன்றரை மணிநேரத்துக்கு முன்புதான் நீக்கிய தகவல் தனக்கே தெரியும் என்றும் கூறியிருந்ததார்.

அதே சமயம், கோலி டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக வந்த செய்தியை பார்த்தபோது தானும் ஆச்சரியப்பட்டதாகவும், அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுமாறு பிசிசிஐ கூறவில்லை என்றும் கோலி ஏன் அந்த நேரத்தில் அப்படியொரு முடிவை எடுத்தார் என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து கூறியுள்ள சவுரவ் கங்குலி, “ரோஹித் சர்மாவிடம் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்த போது என் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இப்போது ரோஹித் தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த செயலுக்கு பலரும் என்னை விமர்சித்தார்கள். இப்போது, யாரும் என்னை விமர்சிப்பதில்லை. இருந்தாலும் நான்தான் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்தேன் என்பதை மறந்து விட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow