IND VS AUS: 150-க்கு ஆல் அவுட்டான இந்தியா.. சீனியர்கள் சொதப்பல்.. இந்தியா மோசமான சாதனை..!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் இன்று துவங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் களமிறங்கினர்.
அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்த்த ஜெய்ஸ்வால் 8 பந்துகளை சந்தித்த நிலையில், ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதியளித்தார். ஜெய்ஸ்வாலைத் தொடர்ந்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் தன் பங்கிற்கு 23 பந்துகளை எதிர்கொண்ட நிலையில், அவரும் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
களத்தில் நீடித்த கே.எல். ராகுல் 74 பந்துகளில் 26 ரன்களை எடுத்த நிலையில், மிட்செல் ஸ்டார்க் பந்தில், நடுவரின் மோசமான தீர்ப்பினால், அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
பெர்த் மைதானத்தில் விளையாடிய அனுபவம் வாய்ந்த விராட் 12 பந்துகளில் 5 ரன்களை எடுத்த நிலையில் ஹேசல்வுட் பந்துவீச்சில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் நிதானமாக விளையாடத் தொடங்கினார். அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிஷப் பண்ட் 37 ரன்களில் அவுட் ஆனார். ஜூரெல் 11, வாஷிங்டன் சுந்தர் 4 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர் களமிறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே 59 பந்துகளுக்கு 41 ரன்கள் எடுத்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் ஹர்ஷித் ராணா 7 ரன்களிலும், பும்ரா 8 ரன்களிலும், ஹேசல்வுட் ஓவரில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இந்தியாவின் இந்த மோசமான விளையாட்டால், பெர்த் மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மிகவும் குறைவான ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனையை இந்தியா படைத்துள்ளது.
What's Your Reaction?