CBSE Exam Date Sheet 2025 : சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு எப்போது..? வெளியான முக்கிய அறிவிப்பு
CBSE Exam Date Sheet 2025 : நடப்பு கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
CBSE Exam Date Sheet 2025 : சிபிஎஸ்இ (CBSE) 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணைகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்நிலையில், தற்போது சிபிஎஸ்இ மாணவர்களுக்கான தேர்வு அட்டவணைகள் வெளியாகியுள்ளது.
அதன்படி, நடப்பு கல்வியாண்டின் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி மார்ச் 18-ஆம் தேதி முடிவடைகிறது. 12-ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதி முடிவடையவுள்ளதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ வரலாற்றில் முதன்முறையாக 86 நாட்களுக்கு முன்னதாக பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பொதுத்தேர்வில் இரண்டு பாடங்களுக்கு இடையே போதிய இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு மாணவர் தேர்வு செய்யும் இரண்டு படங்களும் ஒரே தேதியில் வரக்கூடாது என்பதற்காக குறைந்தது நாற்பதாயிரம் பாடங்களை ஒப்பிட்டு தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அட்டவணையை சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். அதன்படி, 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 14-ஆம் தேதி முடிவடைகிறது. மேலும் பொதுத் தேர்வு மார்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வரும் மே 9-ஆம் தேதி வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.
இதேபோன்று, 11-ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 21-ஆம் தேதி முடிவடைகிறது. பொதுத் தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கி மார்ச் 27-ஆம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வரும் மே 19-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
10-ஆம் வகுப்பிற்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 22-ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 28-ஆம் தேதி முடிவடைகிறது. பொதுத் தேர்வுகள் மார்ச் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ஆம் தேதி முடிவடைகிறது. பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வரும் மே 19-ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து சிபிஎஸ்இ மாணவர்களுக்கான தேர்வுகள் அட்டவணைகள் குறித்த எதிர்பார்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?