யுவராஜ், சச்சின் சாதனையை முறியடித்த வைபவ்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தந்தை

13 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, முன்னாள் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார்.

Nov 26, 2024 - 23:37
 0
யுவராஜ், சச்சின் சாதனையை முறியடித்த வைபவ்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தந்தை
13 வயதில் கிரிக்கெட்டில் அறிமுகமாகி சாதனை படைத்துள்ள வைபவ் சூர்யவன்ஷி

ஐபிஎல் மெகா ஏலமானது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டிற்கான ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்றது. இதில் 13 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷியை ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஏலத்தில்  13 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷிக்கு 30 லட்சம் ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டது. இவரை ஏலத்தில் எடுப்பது தொடர்பாக டெல்லி கேபிடல்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் அணிக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக ராஜஸ்தான் அணி வைபவ் சூர்யவன்ஷியை தன்வசப்படுத்தியது.

இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி மூன்று வயது முதலே கிரிக்கெட் விளையாடி வருகிறார். இவரின் கிரிக்கெட் ஆர்வத்தை பார்த்த அவரது தந்தை சவ்ஜீவ் சூர்யவன்ஷி தனது இடத்தை விற்று மகனுக்கு கிரிக்கெட் விளையாட நிதியளித்துள்ளார். 

வைபவ் சூர்யவன்ஷி தனது ஒன்பது வயதில் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்து இரண்டரை  ஆண்டுகளுக்கு மேலாக பயிற்சி பெற்றுள்ளார். இவர் தனது 12 வயதில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். ரஞ்சி கோப்பை வரலாற்றில் மிகச்சிறிய வயதில் அறிமுகமான வீரர் என்ற பெருமையை பெற்றார். 

தொடர்ந்து, சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான யூத் டெஸ்ட் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி 62 பந்துகளில் சதம் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மேலும், இளம் வயதில் சதமடித்தவர் என்ற சாதனையை படைத்தார். 

இந்நிலையில், வைபவ் சூர்யவன்ஷியின் வயது 15-ஆக இருக்கலாம் என்று வதந்தி பரவி வருகிறது. இதற்கு பதிலளித்த அவரது தந்தை சவ்ஜீவ் சூர்யவன்ஷி கூறியதாவது, வைபவ் சூர்யவன்ஷி தனது எட்டு வயதின் போதே பிசிசிஐ-யின் போன் டெஸ்டில் ( BCCI bone test) கலந்து கொண்டார். அவர் இதற்கு முன்பு 19 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் விளையாடியுள்ளார். நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை. வேண்டுமானால் அவரை வயது பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்று கூறினார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங்கும், சச்சின் டெண்டுல்கரும் தனது 15 வயதில் கிரிக்கெட்டில் அறிமுகமாகி இருந்தனர். தற்போது இவர்களது சாதனையை வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow