ஐபிஎல் 2025 போட்டி எப்போது..? வெளியான சூப்பர் அப்டேட்..!
2025 ஐபிஎல் தொடர் மார்ச் 23 ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு குழு கூட்டத்திற்கு பிறகு அறிவித்துள்ளார்.
கிரிக்கெட் தொடரில், உலகக்கோப்பைக்கு அடுத்தப்படியாக ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் தொடங்கி, ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. கோடை வெயிலையும் பொறுட்படுத்தாது கிரிக்கெட் மைதானங்களுக்கு படையெடுக்கும் ரசிகர்களுக்கு பிசிசிஐ ஐபிஎல் தொடர் எப்போது தொடங்கும் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 2025 ஐபிஎல் தொடர் மார்ச் 23 ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் அறிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதரபாத் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த 2024 ஐபிஎல் தொடரில், சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி கோப்பையை கைப்பற்றியது.
பிசிசிஐ-யின் புதிய செயலாளராக தேவஜித் சைகியா தேர்வு செய்யப்பட்ட நிலையில், அப்போது நடைபெற்ற ஆலோசனையில், சாம்பியன் டிராபி, ஐபிஎல் தொடர், மகளிர் ஐபிஎல் தொடர் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. அதில், 2025 ஐபிஎல் தொடரின் போட்டிகள் எப்போது தொடங்கும், எத்தனை போட்டிகள் நடத்தப்படும்? என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் அணிகளை பொறுத்தவரை ஒவ்வொரு அணியின் உரிமையாளர்களும் தங்களது அணியை மிகவும் பலம் வாய்ந்ததாக கட்டமைத்துள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், வரும் ஐபிஎல் தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு ஐபிஎல் ஏலத்தில் மிக அதிக தொகைகு இந்திய வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.
2025 ஐபிஎல் தொடர் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது. ஒவ்வொரு தொடரின் இறுதிப்போட்டியில் வென்ற அணியின் சொந்த மைதானத்தில் எப்போதும் இறுதி போட்டி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?