மும்பை இந்தியன்ஸ் வீரர் அபாரம்.. 12 ஆண்டுகளுக்கு பின் நடந்த தரமான சம்பவம்
துலீப் டிராபி தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரரும், இந்தியா ‘சி’ அணி வீரருமான அன்ஷுல் கம்போஜ் 8 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பை டெஸ்ட் தொடர் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சுப்மன் கில் தலைமையிலான ‘இந்தியா ஏ’ மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான ‘இந்தியா பி’ அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்தியா பி அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
அதேபோல், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான ‘இந்தியா சி’ மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான ‘இந்தியா டி’ அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டியில் இந்தியா சி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில், இந்த தொடரின் நான்காவது போட்டி ஆந்திரா மாநிலத்தின் அனந்தபூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான ‘இந்தியா சி’ அணியும், அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான ‘இந்தியா பி’ அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற இந்தியா பி அணி முதல் ஃபீல்டிங் தேர்வு செய்தது.
இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்தியா சி அணி, தனது முதல் இன்னிங்ஸில் 525 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய இஷான் கிஷன் 126 பந்துகளில் [14 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] 111 ரன்கள் குவித்தார். மேலும், மானவ் சுதர் 82 ரன்களும், பாபா இந்திரஜித் 78 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்களும் எடுத்தனர். இந்தியா பி அணி தரப்பில் ராகுல் சாஹர் மற்றும், முகேஷ் குமார் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து களமிறங்கிய இந்தியா பி அணி, முதல் இன்னிங்ஸில் 332 ரன்கள் எடுத்தது. மற்ற வீரர்கள் சொதப்பலாக ஆடியபோதும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 157 ரன்கள் எடுத்தார். விக்கெட் கீப்பர் நாராயண் ஜெகதீசன் 70 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதில், நாராயண் ஜெகதீசன், முஷீர் கான், சர்ஃப்ராஷ் கான், ரிங்கு சிங், நிதிஷ்குமார் ரெட்டி ஆகிய தொடக்க வீரர்கள் 5 பேரையும் அன்ஷுல் கம்போஜ் வெளியேற்றினர். தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய அன்ஷுல் கம்போஜ், வெறும் 69 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, மொத்தம் 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
துலீப் டிராபி வரலாற்றில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு 8 விக்கெட்டுகளை கைப்பற்றி அன்ஷுல் கம்போஜ் சாதனைப் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, கடந்த 2012ஆம் ஆண்டு அஷோக் திண்டா 123 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதேபோல், 63 ஆண்டுகால துலீப் டிராபி வரலாற்றில் வேகப்பந்து வீச்சாளரின் 2ஆவது சிறந்த பந்துவீச்சையும், மொத்தத்தில் 5ஆவது சிறந்த பந்துவீச்சையும் அன்ஷுல் கம்போஜ் பதிவுசெய்தார்.
வீரர்கள் பெயர் | போட்டி | ஆண்டு | சிறந்த பந்துவீச்சு |
டெபாசிஸ் மொஹந்தி | இந்தியா கிழக்கு vs இந்தியா தெற்கு | 2001 | 10/46 |
பலூ குப்தே | இந்தியா மேற்கு vs இந்தியா தெற்கு | 1963 | 9/55 |
சௌரப் குமார் | மத்திய இந்தியா vs இந்தியா கிழக்கு | 2023 | 8/64 |
அர்ஷத் அயூப் | இந்தியா தெற்கு vs இந்தியா வடக்கு | 1987 | 8/65 |
அன்ஷுல் கம்போஜ் | இந்தியா சி vs இந்தியா பி | 2024 | 8/69 |
தொடர்ந்து 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா சி அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்திருந்தபோது 5 நாட்கள் நிறைவு பெற்றதை அடுத்து ஆட்டம் டிரா ஆனது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 62 ரன்களும், ராஜத் படிதார் 42 ரன்களும் எடுத்து வெளியேறினர். ஆட்டநாயகனாக, அன்ஷுல் கம்போஜ் தேர்வு செய்யப்பட்டார்.
What's Your Reaction?