விளையாட்டு

கலக்கும் இந்திய வீரர்கள்.. டாப் 10 பட்டியலில் 3 பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள்

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசியதன் மூலம், முதல் 10 இடத்திற்குள் 3 பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்கள் இடம் பிடித்துள்ளனர்.

கலக்கும் இந்திய வீரர்கள்.. டாப் 10 பட்டியலில் 3 பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள்
முதல் 10 இடத்திற்குள் 3 பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்கள்

வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. குறிப்பாக முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசியதோடு, 2ஆவது இன்னிங்ஸில் அபாரமாக செயல்பட்டு, 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதனையடுத்து நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும், போட்டி 3 நாட்கள் நடைபெற்ற போதிலும், சிறப்பாக செயல்பட்ட பந்துவீச்சாளர்கள் இரண்டு இன்னிங்ஸிலும் முழுமையாக 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். ஜாஸ்பிரிட் பும்ரா இரண்டு இன்னிங்ஸிலும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல், ரவிச்சந்திரன் அஸ்வின், முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும், 2ஆவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

இதனையடுத்து, ஐசிசி தரவரிசைப் பட்டியலை நேற்று திங்கட்கிழமை வெளியிட்டது. பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் ஜஸ்பிரிட் பும்ரா 870 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அதேபோல், மற்ற இந்திய வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் 869 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 809 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திலும் உள்ளனர்.

ஆஸ்திரேலியா வீரர் ஜோஷ் ஹசில்வுட் 847 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும், பேட் கம்மின்ஸ் மற்றும் ககிசோ ரபாடா ஆகியோர் 820 புள்ளிகளுடன் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தையும் பிடித்தனர்.

அதே சமயம், டெஸ்ட் ஆல்-ரவுண்டர்கள் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா 468 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரவிச்சந்திரன் அஸ்வின் 358 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், அக்‌ஷர் பட்டேல் 259 புள்ளிகளுடன் 7ஆவது இடத்திலும் உள்ளனர். வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் 285 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூட் 899 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 829 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேற்றம் அடைந்து 792 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும், 6 இடங்கள் முன்னேறி விராட் கோலி 6ஆவது இடத்திலும், ரிஷப் பண்ட் 9ஆவது இடத்திலும் உள்ளனர்.