பாராலிம்பிக்: பேட்மிண்டன் போட்டியில் கலக்கிய தமிழ்நாடு வீராங்கனை!

துளசிமதி முருகேசன் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கால்நடை மருத்துவ அறிவியல் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சுஹாஸ் யதிராஜ் இந்தோனேசியா வீரர் ராம்தானியை 21-7, 21-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

Aug 29, 2024 - 22:04
Aug 30, 2024 - 10:23
 0
பாராலிம்பிக்: பேட்மிண்டன் போட்டியில் கலக்கிய தமிழ்நாடு வீராங்கனை!
Thulasimathi Murugesan

பாரீஸ்: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 'பாரீஸ் ஒலிம்பிக் 2024' போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கி கடந்த 11ம் தேதி நிறைவடைந்தது.மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்றனர். இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி  பாரீஸில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. 

பாராலிம்பிக் தொடரில் 4,400 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். மொத்தம் 22 பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியாவில் இருந்து 84 வீரர்கள், 12 விளையாட்டு பிரிவுகளில் கலந்து கொள்கின்றனர். நமது தமிழ்நாட்டை சேர்ந்த 'தங்க நாயகன்' மாரியப்பன் தங்கவேல், துளசிமதி முருகேசன், சிவராஜன் சோலைமலை, மனிஷா ராமதாஸ், நித்யஸ்ரீ சுமதி சிவன், கஸ்தூரி ராஜாமணி ஆகியோர் பாராலிம்பிக் தொடரில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், பாராலிம்பிக்கில் கலப்பு இரட்டையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நித்தேஷ் குமார் மற்றும் துளசிமதி முருகேசன் இந்தியாவை சேர்ந்த சுஹாஸ் யதிராஜ் மற்றும் பாலக் கோஹ்லியை எதிர்கொண்டனர். பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் நித்தேஷ் குமார்-துளசிமதி முருகேசன் ஜோடி  21-14, 21-17 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 

29 வயதான நித்தேஷ் குமார் ஹரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். துளசிமதி முருகேசன் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கால்நடை மருத்துவ அறிவியல் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சுஹாஸ் யதிராஜ் இந்தோனேசியா வீரர் ராம்தானியை 21-7, 21-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இவர் அடுத்த போட்டியில் கொரிய வீரர் ஷின்யையை எதிர்கொள்கிறார். கலப்பு இரட்டையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஜோடியிடம் தோல்வியை தழுவிய சுஹாஸ் யதிராஜ்  ஒற்றையர் பிரிவு போட்டியில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார்.

மேலும் வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை ஷீத்தல் தேவி மிகச் சிறப்பாக விளையாடி 703 புள்ளிகள் பெற்றார்.  இதன்மூலம் பாராலிம்பிக்கில் வில்வித்தையில் 700 புள்ளிகள் கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஷீத்தல் தேவி பெற்றார். ஆனால் அதன்பிறகு துருக்கி வீராங்கனை ஓஸ்னூர் கிர்டி 704 புள்ளிகள் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow