Kieron Pollard : ப்பா.. என்னா அடி.. ரஷித்கானுக்கு மரண பயம் காட்டிய பொல்லார்ட்.. 5 பந்தில் 5 சிக்ஸர் விளாசினார்!

Kieron Pollard Hit Record Six of Rashid Khan Bowling : ரஷித்கான் ஷாட் பிட்ச்சாக போட்ட முதல் பந்தை லெக் சைடில் தூக்கி அடித்து சிக்ஸர் விளாசிய கிரன் பொல்லார்ட், 2வது பந்தையும் அசால்ட்டாக ஆப் சைடில் தூக்கி அடித்து சிக்ஸராக மாற்றினார். இதனால் மிரண்டு போன ரஷித்கான், 3வது பந்தை லைன் அண்ட் லென்த்தை மாற்றி போட, அதையும் சிக்ஸருக்கு பறக்க விட்டு கெத்து காட்டினார் பொல்லார்ட்.

Aug 11, 2024 - 12:33
Aug 12, 2024 - 17:37
 0
Kieron Pollard : ப்பா.. என்னா அடி.. ரஷித்கானுக்கு மரண பயம் காட்டிய பொல்லார்ட்.. 5 பந்தில் 5 சிக்ஸர் விளாசினார்!
Kiran Pollard And Rashid Khan

Kieron Pollard Hit Record Six of Rashid Khan Bowling : இங்கிலாந்து நாட்டில் 'தி ஹண்ட்ரடு ஆண்கள் கிரிக்கெட் போட்டி தொடர் (The Hundred Men's Competition 2024) நடந்து வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் தலா 100 பந்துகள் விளையாடும். அதாவது முதலில் பேட்டிங் செய்யும் அணி 100 பந்துகளை விளையாடி குறிப்பிட்ட ஸ்கோரை இலக்காக நிர்ணயிக்கும். 2வது பேட்டிங் செய்யும் அணி 100 பந்துகளுக்குள் இந்த இலக்கை எட்ட வேண்டும். 

ஒரு பவுலர் ஒரு ஓவருக்கு 5 பந்துகள் மட்டுமே வீசுவார். பவுலர்களுக்கு ஓவர் முறை கணக்கிடப்படாமல் அவர் எத்தனை பந்துகளை வீசியுள்ளார் என்பது மட்டுமே கணக்கிடப்படும். ஒரு பவுலர் மொத்தம் 20 பந்துகள் வீச வேண்டும். இந்த போட்டி தொடரின் 24வது லீக் ஆட்டத்தில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் (Trent Rockets) மற்றும் சதர்ன் பிரேவ் (Southern Brave) அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணி 100 பந்துகளில் 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. 

அந்த அணியின் டாம் பான்டன் (Tom Banton) 17 பந்துகளில் 30 ரன்கள் விளாசினார். சதர்ன் பிரேவ் அணி சார்பில் கிறிஸ் ஜோர்டான் (Chris Jordan) 20 பந்துகள் வீசி 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். ஜோஃப்ரா ஆர்ச்சர் (Jofra Archer) 20 பந்துகள் வீசி 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் சாய்த்தார். பின்பு சவாலான இலக்கை நோக்கி சதர்ன் பிரேவ் அணி களமிறங்கியது.

ஜான் டர்னர் (John Turner), சாம் குக் (Sam Cook) பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சதர்ன் பிரேவ் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார்கள். அந்த அணி 80 பந்துகளில் 78/6 என பரிதவித்தது. ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிய, மறுபக்கம் கிரன் பொல்லார்ட் (Kieron Pollard) 14 பந்தில் 6 ரன் எடுத்து களத்தில் இருந்தார்.

சதர்ன் பிரேவ் அணி 20 பந்துகளில் 49 ரன்கள் அடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அப்போது உலகின் நம்பர் 1 ஸ்பின் பவுலரான ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷித்கான் (Rashid Khan) பந்து வீச வந்தார். ஷாட் பிட்ச்சாக போடப்பட்ட முதல் பந்தை லெக் சைடில் தூக்கி அடித்து சிக்ஸர் விளாசிய கிரன் பொல்லார்ட், 2வது பந்தையும் அசால்ட்டாக ஆப் சைடில் தூக்கி அடித்து சிக்ஸராக மாற்றினார்.

இதனால் மிரண்டு போன ரஷித்கான், 3வது பந்தை லைன் அண்ட் லென்த்தை மாற்றி போட, அதையும் சிக்ஸருக்கு பறக்க விட்டு கெத்து காட்டினார் கிரன் பொல்லார்ட். தொடர்ந்து ரஷித்கான் வீசிய 4வது மற்றும் 5வது பந்துகளையும் பொல்லார்ட் இமாலய சிக்சர்களாக விளாச மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.

உலகத்தரம் வாய்ந்த பவுலரான ரஷித்கான் பந்துவீச்சில் தொடர்ந்து 5 சிக்ஸர்கள் விளாசிய மகிழ்ச்சியை எதிரணி பேட்டருடன் கிரன் பொல்லார்ட் பகிர்ந்து கொண்டார். 5 பந்தில் 30 ரன்கள் வந்ததால் சதர்ன் பிரேவ் அணி தோல்வி பாதையில் இருந்து வெற்றி பாதைக்கு திரும்பியது. அதிரடியில் மிரட்டிய கிரன் பொல்லார்ட் 23 பந்தில் 5 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

பின்னால் வந்த வீரர்கள் பொறுப்புடன் விளையாடியதால் சதர்ன் பிரேவ் அணி 99 பந்துகளில் 8 விக்கெட் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ரஷித்கானுக்கு மரண பயம் காட்டிய பொல்லார்ட் ஆட்டநாயகன் விருது வென்றார். கடந்த 2021ம் ஆண்டு கிரன் பொல்லார்ட் இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் தனஞ்செயா பந்துவீச்சில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow