நயன்தாரா திருமண ஆவணப்படம்.. தனுஷ் வழக்கை நிராகரிக்க நெட்பிலிக்ஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி..!

நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று நெட்பிலிக்ஸ் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jan 28, 2025 - 12:00
 0
நயன்தாரா திருமண ஆவணப்படம்.. தனுஷ் வழக்கை நிராகரிக்க நெட்பிலிக்ஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி..!
தனுஷ் வழக்கை நிராகரிக்க நெட்பிலிக்ஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படத்தில், நானும் ரவுடி தான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த, 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ்சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே நிராகரிக்க வேண்டும் என்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நெட்பிளிக்ஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பார்த்தசாரதி, திரைப்படத்தில் இடம்பெறாத படப்பிடிப்பு காட்சிகளுக்கு வொண்டர்பார் நிறுவனம் பதிப்புரிமை கோர முடியாது எனவும் படப்பிடிப்பு காட்சிகள் 2020ம் ஆண்டே வெளியான போதும், தாமதமாக 2024 ம் ஆண்டு தான் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த வழக்கை காப்பிரைட் சட்டத்தின் கீழ் தொடர முடியாது என்றும், இந்த காட்சிகள் கடந்த 2020 ம் ஆண்டே முதலே பொதுத்தளத்தில் உள்ளதாகவும் மூன்றாவது நபர் தான் இந்த காட்சிகளை எடுத்ததாகவும் அவர் வாதிட்டார்.

இந்த ஆவணப்படம் தொடர்பாக கடந்த 2024ம் டிசம்பர் 11 ம் தேதி ஆண்டு அன்று தனுஷிடமிருந்து நெட்ஃபிளிக்ஸ்க்கு வழக்கறிஞர் நோட்டீஸ் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது என்றும்,  அந்த ஆவணப்படம் வெளியான ஒரு வாரம் கழித்து தான் தனுஷ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

இதற்கு தனுஷின் வொண்டர்பார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி எஸ் ராமன், நானும் ரவுடிதான் படத்தில் பயன்படுத்தப்பட்ட காட்சியில் அனைத்தும் தனக்கு சொந்தம் என்றும் ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியிட்ட போது, 3 வினாடி  காட்சிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்ததாகவும், உடனடியாக அந்த காட்சிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கக் கூறிய போது, அதற்கு நயன்தாரா தரப்பில், வெளிப்படையாக பதிப்புரிமைக்காக  நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று  பொதுவெளியில் கடிதம் எழுதினார்  என்று வாதிட்டார்.

 படத்தின் ஒப்பந்தம் கையெழுத்தான போது வொண்டர்பார் நிறுவன அலுவலகம் வீனஸ் காலனியில் இருந்ததாகவும், அதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும் எனவும் வொண்டர்பார் நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.

படத்தில் பயன்படுத்தப்பட்ட அந்த காட்சிகள்  படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டது என்றும், நயன்தாரா ஒப்பந்தம் செய்யும் போது அவர் செய்துள்ள சிகை அலங்காரம், உடை அலங்காரத்தில் இருந்து அனைத்தும் நிறுவனத்திற்கே சொந்தமானது என ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டதாக  சுட்டி காட்டினார்.

படம் தொடர்பாக அனைத்து காட்சிகளும் வொண்டர்பாருக்கு சொந்தமானது என்பதால், இது காப்புரிமை சட்டத்திற்கு பொருந்தும் எனவும், படத்தின் படப்பிடிப்பின் பெரும்பாலும் சென்னையில் தான் நடைபெற்றது எனவும், டரெய்லர் மற்றும் படம் சென்னையில் தான்  வெளியிடப்பட்டது எனவும் வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், வொண்டர்பார் நிறுவனத்தின் வழக்கை நிராகரிக்க வேண்டும் என நெட்பிலிக்ஸ் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், வொண்டர்பார் நிறுவனத்தின் தரப்பில் தனுஷ் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow