ஐஎஸ்ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்த நபர்... என்ஐஏ அதிகாரிகளால் கைது..!
தீவிரவாத அமைப்பிற்கு மூளைச் சலவை செய்து இளைஞர்களை சேர்க்க முயன்ற தமிழ்நாடு பிரிவின் தலைவரான அல்பாசித்தை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் 16 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 16 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 இடங்களிலும், சென்னையில் ஒரு இடத்திலும் சோதனை நடந்து வருகிறது. ஐஎஸ்ஐஎஸ்ஐ தீவிரவாத இயக்கம் தொடர்பாக சோதனை நடைபெற்று வருகிறது. தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தினர் உடன் தொடர்பு இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 இடங்களிலும், சென்னை புரசைவாக்கம் பகுதியில் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா சாலை பிளவர்ஸ் தெருவில் வசித்து வந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அல்பாசித் தங்கி இருந்த அறையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவரது சொந்த ஊர் மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல். சோதனைக்கு பிறகு அல்பாசித்தை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
அல்பாசித் ஐஎஸ்ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு ஆட்கள் சேர்க்க முயன்று வந்ததும் என்ஐஏ விசாரணையில் தெரிய வந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இக்மா சாதிக் என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டே என்ஐஏ அதிகாரிகள் இக்மா சாதிக் தொடர்பான சென்னை உள்ளிட்ட பகுதியில் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் தான் இக்மா சாதிக் பின் தொடர்பவராக இருந்தவர் தான் அல்பாசித். இவர் ஐஎஸ்ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்பிற்கு சில கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை மூளை சலவை செய்து ஆட்கள் சேர்க்க முயன்று வந்தது என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அதனால் அல்பாசித்தை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இக்மா சாதிக் தற்காப்பு கலை கற்று தரும் மையம் நடத்தி வந்துள்ளார். இதன் மூலமாக அல்பாசித் பின் தொடர்ந்து வந்துள்ளார். அவர் கைதான பிறகு தமிழக பிரிவின் தலைவன் போல அல்பாசித் செயல்பட்டு வந்து இளைஞர்களை மூளைச் சலவை செய்து வந்துள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் மத்திய உளவுத்துறை அமைப்பால் தீவிரமாக கண்காணிக்கப்படும் 72 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவன் சாதிக் பாட்சா என்கிற இக்மா சாதிக் என்பவரும் ஒருவன் என்பது என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது கைதான அல்பாசித் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் குழு அமைத்து இருந்ததாகவும், ரகசிய இடங்களில் கூட்டம் நடத்தியதாகவும், அதன் அடிப்படையிலேயே கண்டுபிடித்துள்ளதாக என்ஐஏ தரப்பில் கூறப்படுகிறது.
What's Your Reaction?