ஜெ.பி.நட்டா மாறிவிட்டார்... எய்ம்ஸ் மட்டும் அப்படியே உள்ளது - சு.வெங்கடேசன் தாக்கு

ஜெ.பி.நட்டா மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சரான நிலையில், எய்ம்ஸ் பணிகள் எந்த புள்ளியில் ஆரம்பித்தாரோ அதே புள்ளியில் தான் உள்ளது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Jul 8, 2024 - 03:07
Jul 8, 2024 - 17:42
 0
ஜெ.பி.நட்டா மாறிவிட்டார்... எய்ம்ஸ் மட்டும் அப்படியே உள்ளது - சு.வெங்கடேசன் தாக்கு
Su Venkatesan About AIIMS Hospital

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் இலக்கிய சந்திப்பு, இலச்சினை வெளியீட்டு நிகழ்ச்சி கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், எழுத்தாளர் தமிழ்செல்வன் உட்பட பல்வேறு எழுத்தாளர்கள் கவிஞர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் இடையே செய்தியாளர்களை சந்தித்த சு.வெங்கடேசன், "மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. தேர்வு அறிவிப்புகளில் ஹிந்தி மொழி பாடத்திற்கு 10% மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டு விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஹிந்தி அல்லாத மாநில மாணவர்கள் அந்த தேர்வை எழுதினால் 10% மதிப்பெண்களை இழப்பார்கள். இது ஹிந்தி அல்லாத மாணவர்களுக்கு மிகப்பெரிய அநீதியாகும்.

மத்திய அரசின் கல்வி அமைச்சருக்கும் இந்த அறிவிப்பை திரும்பப் பெறவும், தேர்வின் விதிமுறைகள் மாற்றியமைக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளேன். ஹிந்தி அல்லாத குறிப்பாக தென் மாநிலங்கள், தமிழக மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் இதனால் ஏற்பட்டுள்ளது.

இந்த தேர்தல் முடிவிலும் எந்த பாடத்தையும் பாஜக கற்றுக்கொள்ள வில்லையோ என்ற ஐயத்தைதான் இந்த 15 நாட்கள் பார்க்கிறோம். சபாநாயகர் தேர்விலும், முதலில் துணை சபாநாயகர் பொறுப்பை எதிர்க்கட்சிக்கு வழங்கப்படுவது போன்ற சூழலை ஏற்படுத்தி விட்டு, மீண்டும் எதிர்க்கட்சியுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தாமல் வேட்பாளரை அறிவித்தது என்பது, நாடாளுமன்ற நிகழ்வுகள் உள்ளிட்ட ஏற்கனவே என்ன நடைமுறைகளை பின்பற்றுகிறோமோ, அதில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை என்பதை போல தான் நடவடிக்கைகள் உள்ளது. 

இந்த தேர்தலில் இந்திய மக்கள் கடுமையான எதிர்வினையை கொடுத்துள்ளனர். அயோத்தி, சித்ரகூடம் ஆகிய பகுதிகளில் பாஜகவிற்கு பாடம் புகட்டியுள்ளனர். ராமர் பிறந்த இடமான அயோத்தி, ராமர் அதிகமாக வனவாசம் செய்த இடம், இந்தியாவில் ராமர் சிலைகள் அதிகமாக இருக்கும் இடமான சித்ரகூடம் பகுதியிலும் பாஜக வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டு உள்ளனர். கோவில்கள் ஆன்மீக தளத்திற்கான தளம், வாக்குச்சாவடிக்கான வாசல் அல்ல என சொல்லியுள்ளனர். உண்மையான மக்கள் பிரச்னைக்கு முகம் கொடுத்து, ஒரு நல்லாட்சியை உருவாக்குங்கள் என்பது தான் மக்கள் தீர்ப்பு.

3 புதிய சிறப்பு சட்டங்கள், அதில் அமல்படுத்த வேண்டிய விஷயங்களில் கூட, நீதிமன்றத்தின் குரலோ, வழக்கறிஞர்கள் குரலோ, மக்களின் குரலோ கேட்கப்படவில்லை. பாராளுமன்றத்தில் சட்டங்களின் மாற்றம் செய்யக்கூடிய விஷயத்தில், எந்த விவாதமும் இல்லாமல், 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டின் குற்றவியல் சட்டங்களை மாற்றுவது என்பது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரான செயல். அதை திரும்பப்பெற வேண்டும் என்று நாட்டில் அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் போராடி வருகின்றனர். அதை அரசு திரும்பப்பெற வேண்டும்.

10 ஆண்டுகளாக அகல ரயில் பாதை உருவாக்கப்பட்ட பின்பும் ரயில்கள் இயக்கப்படவில்லை. ரயில் பாதைகள், நான்கு வழிச்சாலை பணிகளாக இருந்தாலும், வட மாநிலங்களை ஒப்பிடுகையில் மிக மிக பிந்தங்கிய மாநிலங்களாக தென் மாநிலங்கள் குறிப்பாக தமிழகம் உள்ளது. உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய வட மாநிலங்களில் கடந்த 10 ஆண்டுகளில் நான்கு வழிச்சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட முதலீடுகளில் ஒப்பிடுகளில் 5இல் ஒரு பங்கு தான் மத்திய அரசால் தமிழகத்திற்கு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

கடந்த முறை நட்டா சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது மதுரைக்கு எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டது, அதன் பின் பாஜகவின் தலைவராகி முழு பொறுப்பை முடித்துவிட்டு, இப்போது மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சராகி உள்ளார். அவர் எந்த புள்ளியில் ஆரம்பித்தாரோ அதே புள்ளியில் தான் எய்ம்ஸ் பணிகள் உள்ளது” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow