1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்; விருத்தாசலம் விவசாயிகள் கவலை
விருத்தாசலம் அருகே சீரமைக்கப்படாத இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் 1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.
விருத்தாசலம் அடுத்துள்ள ஆலிச்சிகுடி கிராமத்தில் திறக்கப்பட்டுள்ள தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், சுமார் 5,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 7) பெய்த கனமழையினால், நேரடி நெல் கொள்முதல் நிலையம் முழுவதும் சேரும் சகதியமாக மாறியது. இதனால் மழைநீர் வெளியே செல்ல முடியாமல், விவசாயிகளின் நெல்மணிகள் மழையில் நனைந்து சேதமடைந்தது.
சுமார் 1000 நெல் மூட்டைகள் அளவிற்கு மழையில் நனைந்து சேதம் அடைந்திருப்பதாகவும், தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு மேலாக நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாததால், மழையில் நனைந்த நெல்மணிகள், முளைப்புத் தன்மை ஏற்பட்டு வீணாகி வருவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மேலும் அவசரக் கதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதாகவும், சமதளமான களத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காமல், விவசாய நிலத்தில் திறந்ததால், கொள்முதல் நிலையம் முழுவதும் சேரும், சகதியமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை பாதுகாப்பதற்காக, தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
What's Your Reaction?






