தமிழ்நாடு

அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் சிக்கிய போதைப்பொருள்.. வெளியான திடுக்கிடும் தகவல்

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் சிக்கிய போதைப்பொருள்.. வெளியான திடுக்கிடும் தகவல்
அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் சிக்கிய போதைப்பொருள்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் போதைப்பொருள் உட்கொள்வதாக  ராஜீகாந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் தேரணி ராஜன், அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இதையடுத்து போலீசார் நேற்று மாணவர்களின் அறைகளில் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக விடுதியின் டவர் 3-ல் தங்கியிருந்த பயிற்சி மருத்துவர்கள் தருண், சஞ்சய் ரத்தினவேல், ஜெயந்த், கார்த்திக் ஆகியோரின் அறைகளில் சோதனை நடத்தினர். இதில் 150 கிராம் கஞ்சா, ஊசி வடிவில் வைத்திருந்த கேட்டமைன் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், பயிற்சி மருத்துவர்கள் போதைப்பொருள் உட்கொண்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  குறிப்பாக ஜெயந்த் மற்றும் தருண் அறையிலிருந்து 110 கிராம் கஞ்சா போதைப்பொருளும், கார்த்திக் அறையிலிருந்து 15 கிராமும்,  சஞ்சய் அறையில் இருந்து 34 கிராம் கஞ்சா போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து போலீசார் பயிற்சி மருத்துவர்கள் ஜெயந்த், தருண், சஞ்சய் ரத்தினவேல், கார்த்திக் ஆகியோரை கைது செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் இவர்கள் அனைவரையும் ஜாமினில் விடுத்தது. பயிற்சி மருத்துவர்கள் தருண், சஞ்சய் ரத்தினவேல், கார்த்திக், ஜெயந்த் ஆகியோர் மீது போலீசார் போதைப்பொருள் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பயிற்சி மருத்துவர்களுக்கு யார் போதைப்பொருள் விற்பனை செய்கிறார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில், கோட்டூர்புரம் பகுதியில் இருந்து தான் கஞ்சா போதைப்பொருள் விற்பனை நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் மருத்துவ மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த சைதாப்பேட்டையைச் சேர்ந்த ரோட்னி ரோட்டரிக்கோ என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இவரிடம் இருந்து ஒரு கிலோ 400 கிராம் கிரீன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைதான ரோட்னி ரோட்டரிக்கோவுக்கு கஞ்சா எங்கு இருந்து வருகிறது? இதன் பின்னணியில் உள்ள கும்பல் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில்,  பிபிஏ பட்டதாரியான ரோட்ரிக்கோ தனியார் டெலிவரி நிறுவனத்தில் மாதம் 40 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றுவதாகவும்,  குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. 

இதனால், தன்னுடைய நண்பர் ஒருவர் மூலம் அறிமுகமான மென்பொறியாளரிடம் ஒரு கிலோ கஞ்சாவை 30 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி வந்து அதை சிறு பொட்டலங்களாக்கி 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்று வந்ததும் தெரிய வந்துள்ளது.  இதையடுத்து, தப்பியோடிய இரண்டு மாணவர்களையும், தலைமறைவாக உள்ள போரூரைச் சேர்ந்த மென் பொறியாளரையும் போலீசார் தேடி வருகின்றனர்.